Tuesday, 8 April 2014

யாதும் ஊரே; யாவரும் கேளிர்




“Accept this Jesus Christ as the only Saviour of all Mankind AND His CHURCH and Sacraments as needed for your Heavenly Growth” (S.P. 100)
G. XAVIER REGIS, M.A., B.T., S.L.C.
                                                                                    6/56, Arasady 3rd street,
                                                                                              Cheranmahadevi – 627 414,
                                                                                             Tirunelveli District,
                                                             Tamilnadu – India.

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்."
     எதை நான் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களுக்குத் தருகிறேன் என அர்ச். சின்னப்பர் கூறுகிறார்.  அதுபோல் நான் எதை அர்ச். சின்னப்பரிடமிருந்து பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களுக்குத் தருகிறேன்.  நான் நமது சமுதாய மக்களுக்கு தரும் இதுபோன்ற விசயங்கள் அனைத்தும், நமது கத்தோலிக்கத் திருச்சபை காலா காலமாக கடைப்பிடித்து போதித்து வந்த விசுவாச சத்தியங்கள்.  தற்போதைய திருச்சபைத் தலைவர்கள் அதை சீரழித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இத்தகையவைகள் தங்களுக்கு அவ்வப்போது தரப்படுகிறது. தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறாகுமா ? விருத்தசேதன விசயத்தில்** அர்ச். இராயப்பருடைய குறையை எல்லோர் முன்னிலையிலும் அர்ச். சின்னப்பர் சுட்டிக் காட்டவில்லையா? அதுபோல அடியேனாகிய நானும் தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறேன் அவ்வளவுதான்.  அடுத்து இந்த கட்டுரையை தொடங்குவதற்கு முன் சில கருத்துகளையும், விளக்கங்களையும், சட்டங்கள் கூறுவது பற்றியும் தெரிவித்துவிட்டு மீண்டும் கட்டுரையைத் தொடரலாம் என நினைக்கிறேன்.
     குடியுரிமை (Nativity)  இந்த உலகம் படைக்கப்பட்டது அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்கே..! படைப்புகள் அனைத்தும் ஒன்று மற்றொன்றுக்கு உறவு என்பதை முதுபெரும் தமிழ் இலக்கிய நூலாகிய புறநானூறு எழுதிய கணியன் பூங்குன்றனார் அவர் தம் பாடலில் கீழ்வருமாறு கூறுகிறார்.  "யாதும் ஊரே; யாவரும் கேளிர்." “The whole world is my village, All men are my Kinsmen இதன் பொருள் உலகிலுள்ள அனைத்து ஊர்களும் என்னுடைய ஊராகும்; அதில் வாழும் மக்கள் அனைவரும் என்னுடைய உறவினர்களே. நமது இந்திய திருநாட்டிற்கு உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கு இல்லாத தனி சிறப்பு ஒன்று உண்டு.  அது என்னவென்றால்        " வேற்றுமையில் ஒற்றுமை ".   "Unity in Diversity".
     நமது திருச்சபைச்சட்டம் சொல்வதை சற்று கவனிப்போம்.  கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆறு மாதம் ஒரு பங்கில் உள்ள ஊர்களில் ஏதேனும் ஒன்றில் குடிஇருந்தால் அவர் அந்த ஊரை சார்ந்தவர் என அங்கீகாரம் தருகிறது. நான் 37 ஆண்டுகள் மனைவி மக்களோடு சேரன்மகாதேவியில் வாழ்ந்து வருகிறேன். 
     நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் (Constituency of India) கூறுவதை தருகிறேன்.  ஓர் இந்திய குடிமகன் இந்திய எல்கைகளுக்குள் எங்கு வேண்டுமானாலும் வாழலாம், தொழில் பண்ணலாம் எனவும் கூறுகிறது. ஆகவே மேற்கூறியவைகளிலிருந்து நான் இந்த ஊரைச்சார்ந்தவன் என்பது எண்பிக்கப்படுகிறது என்பதில் இனி யாருக்கும் எந்தச்சந்தேகமும் எழாது என நம்புகிறேன்.  அடுத்து நமது ஊருக்கும் ஸ்தல திருச்சபைக்குமுள்ள கருத்து வேறுபாடுகளை சற்று சிந்திப்போம்.  11.07.1999 நமது ஊர்கூட்ட அறிக்கையில் ஐந்து குடும்பங்களை ஊரிலிருந்தும், பங்கு திருச்சபையிலிருந்தும் விலக்கிவைத்துள்ளார்கள்.    இது ஊர் மக்கள் அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அப்போதைய ஊர்த்தலைவர் மற்றும் ஊர் பொறுப்பாளர்கள் கையப்பமிட்டுள்ளனர்.  (ஆதாரம் : இறைத் தந்தையில் - 2000 ஒன்றிணைவோம் என்ற புத்தகம் பக்கம் 22, 23 மற்றும் 24 ஆகிய பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது - நன்றி.)  குடும்பங்கள்தான் ஐந்து, ஆனால், அந்த ஐந்துதான் ஒரு மிகப் பெரிய அமைப்பாகிய கத்தோலிக்க கிறிஸ்தவர் நலப்பேரவை" எனும் அமைப்பு உருவாக முழுமுதற் காரணமாய் அமைந்தது என்பதை யாரும் மிக எளிதாக அதை மறந்திருக்கமாட்டார்கள்  என நம்புகிறேன்.  அந்தச் சங்கத்தின் பதிவு எண் 53/2000, 56, அரசடி 3 வது தெரு, சேரன்மகாதேவி. அதன் தலைவர் திரு. ஞா. சேவியர் ரெஜிஸ், துணைத் தலைவர்கள் திரு. தாசன்,  திரு. ஜோசப் சிரில், திரு. அமல்ராஜ் செயலர், திரு. ஜாண் கிளிப்டன் துணைத் செயலர், திரு. T.அலெக்ஸ் பொருளாளர்.  நானாக இந்தப் பதவியைத் தாருங்கள் என கேட்கவில்லை.  நீங்களாகவே அதை எனக்குத் தந்தீர்கள்.  இதுவரை பதவியை நான் தேடியதில்லை, பதவிதான் என்னைத்தேடி வந்தது.  ஆகவே அந்த அங்கீகாரதத்தின்படி முன்னாள் ஊர் தலைவர் அமரர். திரு. ஞானமிக்கேல் ஆசிரியர் அவர்களின் 3வது குமாரர் திரு. ஞா. ரெக்ஸ்டன் பிரகாசம் அவர்களின் திருமணத்தை ஊரும், திருச்சபையும் இரும்புக்கரம் கொண்டு அதை நடத்தவிடாமல் தாக்குதல் தொடுத்தபோது அன்னாருடைய திருமணத்தை அடியேனாகிய யான் இலத்‌தின் மொழியில் திருப்பலி நிறைவேற்றும் குருவானவரின் பொற்கரத்தால் இனிதே நடத்தி முடித்தேன்.
     அடுத்து மறைந்த வார்டன் சார் திரு. செல்லத்துரை ஆசிரியர் அவர்களின் மனைவி திருமதி. சிறிய புஷ்பம் அவர்கள் இறந்தபோது அவர்களை அடக்கம் செய்வதற்கு ஊராரும், திருச்சபையும் தடுத்தபோதும் கூட அந்த அம்மையாரின் பூதஉடலை போலீஸ் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டதும் எனது தலைவர் பதவி காலத்தில்தான். அப்போதும் நான் இந்த ஊர்க்காரனாகத்தான் செயல்பட்டேன். அடுத்து நமது மிக்கேல் ஐயா கோயில் அடிமட்டத்திலிருந்து இடிக்கப்பட்டு அப்போதைய பங்குதந்தை சங். K.S.அருளானாந்தம் சே.ச. அவர்களால் புதுப்பிக்கப்பட்டு 13.01.1983 அன்று அப்போதைய ஆயர். மேதகு. ச. இருதயராஜ் ஆண்டகை அவர்களால் அபிசேகம் செய்யப்பட்ட நிலையிலிருந்த கோயிலை மீண்டும் தரைமட்டமாக இடித்துத்தள்ளி கட்ட வேண்டும் என பங்குத்தந்தை கூறிய போதும், 25 ஆண்டுகளுக்குள் மீண்டும் இடித்துக் கட்டுவதென்பது இயற்கைக்கு முரண்பாடனது ஆகவே அதை இடிக்காமல் பழுதுள்ள இடங்களில் பழுதுபார்த்து நிவர்த்திசெய்துகொள்ளலாம். ஆகவே, இது தற்போது தேவையில்லை என என்னுடைய கருத்தைதான் கூறினேன்.  உடனே, மண்ணின் மைந்தர்கள் என தங்களைத் தானே தம்பட்டம் அடித்துக்கொண்டு, இவர் என்ன இந்த ஊர்க்காரரா ? இவர் எப்படி இப்படிச் சொல்லலாம் ? என வசை மொழிந்தார்கள்.  சரி கோயிலை கட்டினார்களே, அதை contract basisல் விட்டிருந்தால் மட்டுப்பாவல் concrete இடிந்து விழுந்த போது அதற்குரிய நஷ்டஈட்டை சம்பந்தப்பட்ட contractorரிடம் பெற்றுக்கொண்டிருக்கலாம்.  கோயில் கட்டும் போது இது “உங்கள் கோயில்” “உங்கள் கோயில்” என்று கூறி பணம் பெற்றுவிட்டு, கட்டி முடிந்தவுடன் இது மேற்றிராசனக் கோயில் என ஊர்க்காரர்களை கேவலப்படுத்திவிட்டார்கள் இந்த மறைமாவட்ட நிர்வாகத்தினர்.

இப்போதுள்ள ஊர்ப்பிரச்னை
     2012 June 12 ல் சேரன்மகாதேவி பங்கு பொறுப்பை அருட்பணி. அருள் M. ஆரோக்கியம் அவர்கள் ஏற்றார்கள்.  30 நாட்களுக்குள் ஊர் மக்களிடையே பிளவுகள் ஏற்பட காரண கர்த்தாவாக செயல்பட்டார்கள்.  பிரச்னை ஏற்பட காரணங்கள் 1. பங்குப் பேரவை அமைத்தல் 2. நிதிக்குழு அமைத்தல் 3. கல்லறை தோட்டம்.  மேற்கூறிய மூன்று விசயங்களில் ஊர் அமைப்பிற்கும் பங்குச் சாமியாருக்கும் மோதல்கள் உருவாயின.  பங்குப்பேரவை உறுப்பினர்களை தெரிவு செய்ததில் அவர் சற்றே தடம் புரண்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.  அதாவது, மெஜாரிட்டி இனத்தவரை மைனாரிட்டியாகவும், மைனாரிட்டி இனத்தவரை மெஜாரிட்டியாகவும் ஆக்க விரும்பியதன் விளைவாக பங்கை விட்டுச்செல்லும் அளவுக்கு சூழ்நிலைகளை தனக்குத்தானே தேடிக்கொண்டார்.  நிதிக்குழு ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறினார், அதையும் அவரால் செயல்படுத்த இயலவில்லை.  பங்குப்பேரவை பற்றி canon 536  சொல்வதை சற்று கேளுங்கள்.  536 ல் 4 வது பிரிவில், பங்குப்பேரவைக்கு ஆலோசனை வழங்கும் உரிமை மட்டும்தான் உண்டு.  ஆகவே இந்தப்பிரிவை ஊர் அமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை.  காரணம் Legislative Power இல்லை.  மேலும் பங்குப்பேரவையின் முக்கியப் பணிகள் என்ற உட் பிரிவு 7ல் பங்கில் நிகழும் விழாக்களையும், ஏனைய நிகழ்வுகளையும் நன்கு திட்டமிட்டு அவற்றை மக்கள் ஓத்துழைப்புடன் மக்களின் வளர்ச்சிக்குப் பயனுள்ள விதத்தில் நடத்த வேண்டுமெனக் கூறுகிறது. விசுவாச சத்தியங்களில் மட்டுமே சாமியார் கூறுகின்றபடி விசுவாசிகள் நடக்க வேண்டும்; சாமியார் கூறுகின்றபடித்தான் ஊர்காரர்கள் ஊரிலும் நடக்க வேண்டும் என்பது சமுதாய சுதந்திரத்திற்கு எதிரானது.  ஊர் ஒத்துழைப்பின்றி திருவிழாக்கள் எங்காவது நடந்திருக்கிறதா ?
     பங்குக் குருக்களின் வேலை திருப்பலி நிறைவேற்றுவது ஏழு திருவருட்சாதனங்களை தேவைப்படுவோர்க்கு நிபந்தனை இல்லாமல் வழங்குதல்.  பணத்தை எதிர்பார்த்து காரியங்களை செய்யக்கூடாது. திருச்சபைக் கட்டளைகளில் 6 வது கட்டளையாகிய நமது ஞானமேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறது. மாறாக அவர்கள் கேட்கும் உதவிகளை செய்யலாகாது. இன்றைய திருச்சபையில் உள்ளவைகளாகக் கருதப்படும் சொத்துக்கள் அசையா, அசையும் அனைத்தும் கடவுளுக்காகவும், சாமிமார்களின் போஜனத்திற்காகவும் மட்டுமே கொடுக்கப்பட்டது என்பதை என்னைவிட நீங்கள் நன்கு அறிவீர்கள்.  முன்பு கேட்காமல் கொடுத்தோம், ஆனால், இப்போது அவர்கள் கேட்கிறார்கள் கொடுக்க யோசிக்கிறோம். சென்று போதியுங்கள் என்று ஆண்டவர் கூறுகிறார்.  இலவசமாகப் பெற்றுக்கொண்டீர்கள்; இலவசமாகக் கொடுங்கள்.  அர்ச். சவேரியார், அர்ச். அருளானந்தர் மற்றும் ஐரோப்பிய மிஷினரி சபையைச் சார்ந்தோர் இவர்கள் எல்லாம் தாங்கள் தங்கள் நாட்டிலுள்ள சொத்து பத்துக்களையெல்லாம் விற்று இந்தியாவிற்கு வந்து வேதத்தை பரப்பினார்கள். இதில் அர்ச். சவேரியார் மற்றும் அர்ச். அருளானந்தர் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தகுந்தது.  அர்ச். சவேரியார் கடற்கரை பகுதிகளில் வேதம் போதிக்கும் போது அம்மக்களோடு சண்டைபோட்டு ஞானஸ்தானம் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.  ஆனால் இன்று என்ன நடக்கிறது ? ஞானஸ்தானதிற்கு போனால் குடும்பகார்டுக்கு பணம்  கட்டியுள்ளாயா ? கட்டவில்லையெனில் உரியவரிடம் சென்று பணத்தைக் கட்டிவிட்டு வா அப்போதுதான் ஞானஸ்தானம் என்ற நிலை வந்தாச்சு. 
     இந்த நேரத்தில் 1967 ம் ஆண்டு ஓர் ஆங்கிலப்பத்திரிகையில் வந்த ஒரு செய்தி என் ஞாபகத்திற்கு வருகிறது.  உலகத்திருச்சபையின் சொத்து உலகமக்கள் அனைவருக்கும் ஓராண்டுக்கு இருவேளை உணவு வழங்கலாம் எனவும் சேசுசபையின் சொத்து உலகமக்கள் அனைவருக்கும் ஓராண்டுக்கு ஒருவேளை உணவு வழங்கலாம்; அந்த செய்தியை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். (இது பத்திரிகைச் செய்தி) வெளிநாட்டினர் அன்று விதைத்தனர்; இன்று தற்போதைய திருச்சபை தலைவர்கள் அதனை அறுவடை செய்து சுகபோகங்களை அனுபவித்துவருகின்றனர்.  ஒரு குருவானவர் கூறுகிறார்: மாதம் ஒரு குருவானவருக்கு ரூ. 20,௦௦௦/- செலவாகிறதாம்.  ரூ. 20,௦௦௦ என்ன ஆடம்பரமாக இருந்தால் அதற்கு மேலும் செலவு ஆகத்தானே செய்யும்.  கற்பு, தரித்திரம், ஏழ்மை, கீழ்ப்படிதல், தாழ்ச்சி, பொறுமை போன்ற பண்புகளை இப்போதுள்ள குருக்களிடம் காண்பது என்பது அரிது.
     அப்போஸ்தலர்ப்பணி 6:1-4 கூறுகிறது சீடரின் பணி கடவுளின் வார்த்தையை போதிப்பதும், ஜெபிப்பதும் தான்.  அறப்பணி செய்வது சீடர்களின் பணியல்ல என்றும் எடுத்துரைக்கப்படுகிறது.  அந்நாட்களில் சீடர்களின் தொகை பெருகவே அவர்களிடையே கிரேக்க மொழி பேசுவோர் நாள்தோறும் நடக்கும் அறப்பணியில் தங்கள் கைம்பெண்கள் கவனிக்கப்படவில்லை என எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முறையிட்டனர்.  ஆகவே அறப்பணிக்கு திருத்தொண்டர்கள் ஏற்படுத்தப்பட்டனர். 
     எந்த ஊழியனும் இரு எஜமானனுக்கு ஊழியம் செய்ய முடியாது என லூக்காஸ் 17:13ல் கூறுகிறார்.  காரணம் ஒருவனை வெறுத்து மற்றவனிடத்தில் அன்பாய் இருப்பான்; அல்லது ஒருவனைச் சார்ந்து மற்றவனை புறக்கணிப்பான். இது கடவுளுக்கும், செல்வதிற்கும் வேலை செய்ய முடியாது என்பதை விளக்குகிறது.  இன்று என்ன நடக்கிறது என்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் தெரியும். குறிப்பாக, பாளையங்கோட்டை மறைமாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு மிக மிக நன்றாகவே தெரியும்.
     பத்து வருடம் மறைமாவட்டம் ஒரு குருவானவரை படிக்கவைத்து குருவாக ஆக்குகிறது.  ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டி இடவா குருக்களை திருச்சபை உருவாக்குகிறது ? மேலும் சங். மை.பா சேசுராஜ் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனக்கு மேலக்கடையத்தில் 27.62 ஏக்கர் சொத்து இருப்பதாகவும், வங்கி ஒன்றில் ரூ. 30,000/- இருப்பு இருப்பதாகவும் அவரின் சொத்து மதிப்பைக் குறிப்பிட்டுள்ளார்.  சாமியாராய் இருப்பவர் தனிப்பட்ட முறையில் எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார் என்ற கேள்வி எழுகிறது ?
“எதை நான் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களுக்குந் தருகிறேன்” என அர்ச். சின்னப்பர் கூறுகிறார்.  ஆகவே அர்ச். சின்னப்பரிடமிருந்து எதை நான் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களுக்குந் தருகிறேன்.
உரோமையர் 16:17 சகோதரரே நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு ஒவ்வாதே பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குபவர் மீது கண்ணாய் இருந்து அவர்களை விட்டு விலகி இருக்க வேண்டுமென உங்களை மன்றாடுகிறேன். 
கொலேசியர் 2:8-18 மனிதர்களுடைய பாரம்பரியங்களுக்கும் உலகநூல் கோட்பாடுகளுக்கும் பொருந்தினதும், கிறிஸ்து நாதருக்கு பொருந்தாததுமான தத்துவ சாத்திரத்தாலும், மாயமான தந்திர நியாயங்களாலும், ஒருவனும் உங்களை ஏய்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். தாழ்மையிலும், சம்மனசுக்களின் வணக்கத்திலும் விருப்பமுற்று காணாதவைகளில் பிரவேசித்து மாம்ச சிந்தனையில் வீணான கர்வம் கொண்ட எவனும் உங்களை ஏய்காதிருப்பனாக" திருச்சபையின் பரிசுத்த ஆசிரியத்தின் இறுதியான நோக்கம் ஆத்தும இரட்சனியமே.  ஆகவேதான் அர்ச். சின்னப்பர் கூறுகிறார்: இடிப்பதற்கல்ல கட்டி எழுப்புவதற்கே போதிக்கும் அதிகாரம் தரப்படுகிறது. (2 கொரிந்தியார் 13:10)
காலத்தியார் 1:6-10 “ஆகையால் நான் உங்களுக்கு பிரசங்கித்த சுவிசேசத்தையல்லாமல், நாங்களாவது, பரலோகத்திலிருந்து வருகிற தேவதூதானாவது வேறொரு  சுவிசேசத்தை பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவான். அர்ச். சின்னப்பர், தப்பறைகளின் மட்டில் வெளிப்படுத்துகிற உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள கடும் வெறுப்பை, கலாத்தியருக்கு தான் எழுதிய நிருபத்தில் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளது போல வேறெங்கும் வெளிப்படுத்தியதில்லை என்பதை நினவில் கொள்க.  மேற்கூறிய அடிப்படையில் நான் பாளை மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கு இரு கடிதங்கள் எழுதி இருந்தேன்.  அதில் இரண்டாவது கடிதத்தில் கத்தோலிக்க பைபிளில் கூறப்பட்டிருந்த விசுவாச சத்தியங்கள் கோட்பாடுகள் பொது பைபிளில்  மூடிமறைக்கப்பட்டுள்ளத்தை உதாரணத்துடன் ஒரு வயது முதிர்ந்த குருவின் விமர்சன நூலை மேற்கோள் காட்டி விவரித்திருந்தேன்.  பொதுவாக, பொது பைபிளில் நிறைய இடங்களில் விசுவாச சத்தியங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக பத்து எடுத்துக்காட்டுகளை மட்டும் குறிப்பிட்டு அதிலுள்ள தப்பறைகளை எடுத்துக்காட்டியிருந்தேன்.  அந்தப் பத்தில் தேவதாயின் கன்னிமை, சேசுவின் தெய்வீகம், நற்கருணையில் அவரது பிரசன்னம், குருத்துவம், மறுவுலக வாழ்வு ஆகியவை பற்றிய கத்தோலிக்க விசுவாச சத்தியங்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக் காட்டியிருந்தேன்.  நான் கூறுவது சரியாக இருந்தால் பொதுபைபிளை நீக்கிவிட்டு பழையபடி முன்பிருந்தவாறு கத்தோலிக்க பைபிளை விசுவாசிகள் பயன்படுத்த ஆவண செய்யும்படி தாழ்மையுடன் கேட்டிருந்தேன். ஆயரவர்கள் இன்னமும் பதில் தராத நிலையில் நமது சமுதாய நண்பர்கள் சிலர் நான் எழுதியிருந்தத்தை தவறாக புரிந்துகொண்டு விமர்சித்திருந்தார்கள்.  நல்ல மரத்தில் உள்ள கனிகள் மீது கல்லெறி விழத்தான் செய்யும் என்பதை நான் அறியாமலில்லை.  அவர்கள் சரிவர படித்திருந்தால் யார் குழப்புகிறார்கள், யார் குழப்பிப்போய் இருக்கிறார்கள், யாருக்கு கடவுளுடைய வெகுமதி கிடைக்கும் என்பது தெரியும்.  ஆகவே, நம் சமுதாய நண்பர்களுக்கு இறுதியாக கீழ்க்காணும் நீதிமொழிகளையும், உவமைகளையும் நினைவுபடுத்தி இந்த நீண்ட நெடிய மடலை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன். 
1.      வேற்றுமைகளை மறப்போம்
2.      கூடி வாழ்தால் கோடி நன்மை
3.      நம்மில் ஒற்றுமை நீங்கின் நம் அனைவருக்கும் தாழ்வே.
4.      ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
5.      தீதும் நன்றும் பிறர் தர வாரா
6.      ஊதாரி மைந்தனின் தந்தை போலல்லாமல் ஊதாரி    மைந்தனைப் போல திருந்தி நாம் இரு சாராரும் சேர்ந்து   வாழ்வோம்.
7.     நடந்தவைகள் நடந்தவைகளாகவும் இனி நடக்க இருப்பவை நல்லவைகளாகவும் இருக்கட்டும்.
8.      ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க      திருச்சபையை விசுவசிப்போம்.
9.      ஆண்டவரே எங்கள் விசுவாசக் குறையில் எங்களுக்கு  உதவி செய்தருளும். (மாற்கு 9:23)
தங்களின் அன்புமறவா
நன்றியன்
ஞா. சேவியர் ரெஜிஸ்





       **அர்ச். இராயப்பரிடத்திலே அர்ச். சின்னப்பர் கண்டித்த குற்றம் அவருடைய போதகத்தைப் பற்றியல்ல.  ஆனால், அவர் யூதர்களுக்கு இளக்காரம் காட்டினதைப் பற்றித்தான்.  அது என்னவென்றால், விருத்தசேதனமுள்ள யூதர்கள் முன்னால் விருத்தசேதனமில்லாமல் அஞ்ஞானத்திலிருந்து மனந்திரும்பியவர்களோடு போஜனபானம் பண்ண விலக்கிக்கொண்டிருந்தார். அப்படிச் செய்வததினால் விருத்தசேதனமுள்ளவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களைவிட மேன்மைப்பட்டவர்கள்  என்று மற்றவர்கள் எண்ணுவதற்குக் காரணமாய் இருந்ததனால் அது ஒருவித துர்மாதிரிகையாய் இருந்தது.  ஆகையால் கண்டித்தார்.  இப்படிக் கண்டிப்பது அர்ச். இரயப்பருடைய தலைமை அதிகாரத்திற்கு விரோதமானதல்ல.  ஏனெனில், கீழ்ப்பட்டவர்களும், மேற்பட்டவர்களை  மரியாதையோடு அநேக விசயங்களில் கண்டிப்பது வழக்கமே. (கலாத்தியார் 2: 11-14)