Wednesday, 14 January 2015

இராயப்பரின் தலைமைத்துவம்


இராயப்பரின் தலைமைத்துவம்
இன்று இறைவன் இல்லை என்பார் வேரிலிருந்தே வெட்டி ஒதுக்கப்படுகின்றனர். இறைவன் உண்டு என்றாலும் கர்மமறுபிறவிவாதிகள் எப்படியாவது மனிதன் முக்திக்கு ஏற்ற பலனை அந்தந்தக்கட்டத்தில் அந்தந்த மத அனுசரணைப்படி பெற்று அனுபவிப்பான் என்று சொல்வதுடன் ஒவ்வொருவரும் இறைவன் பக்கத்தில் போய்ச் சேரும்போது தாம் சொல்லும் கொள்கையில்தான் ஈடுபட்டிருப்பர் என்ற அளவிற்குத் தத்தம் கொள்கைகளை உயர்த்திப்பேசுவர்.  ஆனால் இவர்கள் யாரும் கடவுள் சித்தம் அவர்தரும் மறை அதன்படி நடந்தால் மோட்ச சன்மானம் : இன்றேல் தண்டனை என்ற அடிப்படையைச் சேர்ந்தவர் அல்ல.  நான் என்பதே என் ஜீவாத்துமாதான் என்று துவக்கி பரிணாம அடிப்படையில் செல்வதால் அவர்களுக்கும் அபிரகாம் வம்ச அடிப்படைக்கும் ஒருபோதும் ஒத்துவரப்போவதில்லை யூத, இஸ்லாமிய மதங்கள் இறைவனை படைப்பின் கர்த்தராகவும், சட்டம் தருபவராகவும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் மதமும் கிறீஸ்தவ வழியும் ஒரே அடிப்படையில் எழுப்பப்பட்ட கட்டடங்களாக அமையும். ஆனால், கடவுள் தாம் முன் அறிவித்தபடியே மனிதனாய், கிறீஸ்துவாய் பிறந்து ஒரு மதத்தையும் அதன் பொறுப்பாளர் ஆசார அனுஷ்டானங்கள் யாவற்றையும் அமைத்துத்தந்திருப்பதால், இனிவேறு எந்த வழியும் செல்லாது எனும் கட்டத்தில் யூதரும் இஸ்லாமியரும் பழைய ஏற்பாட்டிற்குள்ளே நின்றுவிடுகின்றனர்.
                கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களில் விவிலியத்தை ஏற்றுக்கொண்டாலும் அதில் உள்ள பழைய ஏற்பாட்டு எகோவாவையோ, அல்லது தீர்ப்பு நாள் பற்றியும், பரிசுத்த ஆவி பற்றியும் பேசும் ஆகமங்களையோ அடிப்படையாக எடுத்துக்கொண்டு, கிறீஸ்து நிறுவிய வழிக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  மார்டின் லூதர் காலம் தொட்டு வந்த பலதனித்தியங்கிகள் வேதாகமங்களையும் இவற்றிக்குத் தங்கள் தலைவர்கள் கொடுக்கும் விளக்கங்களையும் ஏற்றுக்கொண்டு, அதுவரை ஊரோமை ஆயாராம் பாப்பானவருக்கு உட்பட்டிருந்தாலும் 16-ம் நூற்றாண்டிலிருந்து தலைமைத்துவத்திற்கு உட்படாமல் கிறீஸ்துவைப் பின்பற்றுகிறார்கள்.  கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையினர் எனப்படுவோர் 11-ம் நூற்றாண்டு வரை ஊரோமை சபை ஆயர்முறைகள் யாவற்றிற்கும் உட்பட்டிருந்தாலும் சில பிரச்சனைகளின் சூழ்நிலையில் ஊரோமாபுரியுடன் தொடர்புகொள்ளதவராய் அன்று முழுச்சபையில் உணரப்பட்ட சகல கிறிஸ்துவ முறைகளையும் ஏற்றுத் தனித்து வாழ்பவராயினர்.  உரோமன் கத்தோலிக்க சபையினர், ஆதித்தொட்டு கிறிஸ்து ஏற்படுத்திய தலைமைப்பீடத்திற்கு அறவுரை, அர்ச்சிப்பு, ஆட்சி யாவற்றிலும் அந்தப் பீடத்தின் சொற்படி நடந்ததால்தான் கிறிஸ்துவை உண்மையில் பின்பற்றியவராவோம் எனும் கொள்கையுடையவராய் என்றும்போல் பாப்பானவர் சொற்படி அனைத்திலும் செயல்படுபவராயினர்.
      இந்த எல்லா மறை-முறையினரும் கத்தோலிக்கத்தில் ஒன்றுபட வேண்டுமானால், எந்தக் கட்டத்திலிருந்து பிரிந்து நிற்கின்றாரோ அந்தக் கட்டத்திலிருந்து அவர்கள் ஊரோமை ஆயராம் பாப்பனவருக்கு உட்பட்டு அதிலிருந்து கத்தோலிக்கம் சொல்லும் எல்லா சத்தியங்களையும் ஆசார அனுஷ்டானங்களையும் (பரம்பரைசடங்குமுறைகளையும்விதிகளையும்) ஏற்றுக்கொண்டால்தான் ஒற்றுமை என்பது சாத்தியமாகும்.  எல்லாவற்றையும் மறந்துவிட்டு வெறும் மனிதர் என்ற முறையில் ஒன்றுபடுவோம் என்றால், கிறீஸ்துவில் தரப்பட்ட வழியையும் வாழ்க்கையையும் இழந்தவராவோம் வெறும் பைபிள் அல்லது கிறிஸ்து போதும் என்பது இவற்றின் பொருள் என்ன என்று கேட்கப்போகும்போது பெரும் சிக்கல்களுக்குள் நம்மை மாட்ட வைத்துச் சின்னாபின்னமாக்கிவிடும். ஏதாவது ஒரு தலைமைப்பீடத்தையும் சட்டநூலையும் அமைத்துக்கொண்டு ஏகோபித்து வாழ்வோம் என்றால் அது வெறும் மனித சமரச முறையே தவிர இறைவழியாகாது.  நாத்திகம், இந்தியம், யூதம், இஸ்லாம், ஆகூவினம் – யேகோவா இனம், தனித்தியங்கிகள் கீழ்நாட்டு சபைகள் என்ற வெவ்வேறு படிகளைக்கடந்து கத்தோலிக்கத்துக்குள் வரும்போது, யாவரும் பாப்பானவருடைய அறவுரை, அர்சிப்பு, ஆள்கைக்கு உட்படவேண்டியவராகின்றனர்.  இந்தப் பாப்பனவரை கிறிஸ்துவே நியமித்தார் என்பது தெளிவானால் கிறிஸ்துவை ஏற்கும் அளவிற்கு வந்த யாவரும் ஒரே கிறிஸ்துவ கத்தோலிக்க மறையுடலாக ஆவர்.  பாப்பானவர் – இராயப்பர் இவர்களுடைய தலைமைத்துவம் எப்படிப்பட்டது என்பது நாம் கிறிஸ்துவின் முன் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும்.
      கிறிஸ்து ஏற்படுத்திய விண்ணரசில் இராயப்பரும் பன்னிருவருக்கும் பொறுப்புகள் அளிக்கபடுவதை நற்செய்தி நூல்களிலும், அப்போஸ்தலர்பணி எனும் நூலிலும் காண்கிறோம்.  இராயப்பர் ஆதிச்சபை மக்கள் மனதில் ஆழமாய் பதிந்து நிற்கிறார் என்பது அவர்களது புதிய ஏற்பாட்டு நூல்களிலிருந்து தெளிவாகிறது. 
      இந்தப்பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் (மத் 16:16) நாமே நல்ல ஆயன் (எசேக்கியேல் ஆகமத்தில் சொல்லப்பட்ட யாவேயாகிய ஆயன் நினைவுட்டப்படுகிறார்.) என் ஆடுகள் என்னை அறியும்,  என் கிடையைச் சேராத ஆடுகளும் உண்டு அவற்றையும் நான் கூட்டிச்சேர்க்க வேண்டும்.  இதனால் ஒரே ஆயனும் ஒரே மந்தையுமாகும்.  என் ஆடுகளுக்காக நான் என் உயிரைக் கொடுக்கிறேன் (அரு:10) என் ஆடுகளையும் ஆட்டுக் குட்டிகளையும் மேய்ப்பாயாக (அரு 21/15-17), அ.ப 20:28) உனக்காக வேண்டியிருக்கிறேன்.  நீ திருந்தியபின் உன் சகோதரரைத்திடப்படுத்து. (லூக் 22:32) அழிவின் (நரகின்) பேய்களின் சக்திகள் (வாயில்கள்) என் சபையை மேற்கொள்ளமாட்டா  (மத் : 16:18) நான் உலகம் முடியுமட்டும் உங்களோடு இருப்பேன் (மத்: 28:20).  இராயப்பருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம் எத்தகையது என்பதை இதிலிருந்து கண்டுணர்க.
      ஆதிசபையில் எல்லாவகையிலும் அவர் முதலிடம் வகுத்துச் சபையை நடத்தி வந்தாரே, அவருடைய முதன்மைத்துவம் எத்தகையது என்பதைச் சிந்தித்துணர்க.
      மத் 16:16 – இராயப்பரது விசுவாச அறிக்கைக்காக அவரைப்பாராட்டுவது வெறும் பேச்சு ஆகாது.  பாராட்டும் சந்தர்ப்பத்தில் பொறுப்பையும் வாக்களிக்கிறார், பின்பு கொடுக்கிறார் (அரு:21:15).  அவரும் ஆதி சபையில் பொறுப்புடன் செயல்படுகிறார்.  புதிய ஏற்பாட்டிலேயே கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக அதிகமான தடவைகள் சொல்லப்படும் (மக்கள் மனதில் எழும் முக்கியமானதாக நினைக்கப்படும்) பெயர் இராயப்பருடையதுதான். அப்போஸ்தலர் பட்டியல் ஒவ்வொன்றிலும் அவர் பெயர் முதலில் வைத்துச்சொல்லப்படுகிறது (மத் 10:2, மாற்: 3:16, லூக் 14:14, அ.ப. 20:28) மத்தேயு 10:2)PROTOS  முதல்வர் என்றே சொல்லப்படுகிறார்.  வெறும் வயதில், வரிசையில், மரியாதையில் முதல்வரா ? அல்லது பொறுப்பில் முதல்வரா ? அவருக்குத் தனிப்பெயர் சூட்டப்படுகிறது. (அரு 1.42, மாற் 3.16, மத் 16.18) அவர் திருத்தப்படுகிறார் (மத் 15.23)  அவரது மறுதலிப்பு முன் அறிவிக்கப்படுகிறது.  பசாசு அவரைச் சிதறடிக்கத் திட்டமிட்டுருபதையும் அவருக்காக சேசு பிதாவை மன்றாடியிருப்பதையும், தான் திருந்தியபின் தன் சகோதரரைத் திடப்படுத்த வேண்டிய பொறுப்பையும் கிறிஸ்து உணர்த்துகிறார். (லூக் 21.31-32)  தனி முறையில் அவர் குறிப்பிடப்படுகிறார்.  உன்னை மனிதரைப் பிடிப்பவனாகுவேன் (லூக் 5.10) எனக்கும் உனக்கும் சேர்த்து வரியைக் கொடு (மத் 17.23).  அவரது பாதத்தை கழுவுகிறார் (அரு 13.6) முதலாவது அவருக்குக் காட்சி கொடுக்கிறார் (லூக் 24.34).  கலிலியாவில் காட்சி கொடுப்பேன் என்று அவசர அவசரமாக அவருக்குச் செய்தி சொல்லியனுப்புகிறார் (மாற்: 16.7).  அவருக்குத் தனி விதமாய்க் காட்சி கொடுத்தார் (லூக் 24.34)  அவரது அன்பு தனிவிதமாய் உறுதிப்படுத்தப்படுகிறது (அரு 21.15).  உயிர்த்தப்பின் கல்லறைக்கு இராயப்பரும் அருளப்பரும் ஓடினாலும் முன் ஓடிய அருளப்பர் இராயப்பருக்காக காத்துக்கொண்டு வெளியே நிற்கிறார் (அரு 20.5)  நான் மீன் பிடிக்கப்போகிறேன் என்று இராயப்பர் சொன்னவுடன் மற்றவர் நாங்களும் உங்களோடு வருகிறோம் எனும்போது, ஆண்டவர் கரையில் நின்று ஏவி மீன் கிடக்கச்செய்தவுடனே அவரிடம் இராயப்பர் ஓடுவதும் எல்லாம் அவரை முக்கியஸ்தராகக் காட்டுகின்றன. மக்கள் மத்தியிலும், பன்னிருவர் மத்தியிலும் எந்தச் சம்பவத்தை எடுத்தாலும் இராயப்பர் முதல் ஆளாக இருக்கிறார்.  இந்த முதன்மைத்துவம் எப்படிப்பட்டது ?
      இராயப்பரைப் பற்றி ஜோசப் குல்மன் சாஸ்திரியார் எழுதிய “PETER” எனும் நூலில் ஆதிசபையின் வாழ்க்கையிலும் ஏடுகளிலும் இராயப்பர் வகிக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது, நிச்சயமாகக் கிறிஸ்து அவருக்குத் தாம் ஏற்படுத்திய திருச்சபையில் முதன்மையான முழுப்பொறுப்பை, அதன் நிருவாகப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் என்பது தெளிவு என்கிறார்.  மற்றவர்கள் எந்தக்காரனத்தை முன்னிட்டும் அவரைக் கௌரவப்பபடுத்த எண்ணி அவரை முதற்படியில் தூக்கி வைக்கவில்லை, அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது முழு நிருவாகப்பொறுப்பே (Primacy of Jurisdiction not merely of honour) வெறும் கௌரவ முதன்மையல்ல.  இதை அவருக்கு அளித்தது கிறிஸ்துவே.  இதைஒப்புக் கொள்ளாவிட்டால் ஏதோ கிறிஸ்து நல்ல மனிதர், முன்மாதிரியானவர், நல்ல நீதி முறைகளைச் சொன்னார் அல்லது நமது மரியாதைக்கும் வழிபாட்டிற்கும் கூட உரியவராவார் என்று சொல்லும் அளவுக்குத்தான் புதிய ஏற்பாட்டு நூல்கள் புரியும்.  அவர் சீடர்களை அழைத்து செபத்துக்குமேல் தெரிந்தெடுத்து, பயிற்றுவித்து, சாவிகளையும் பொறுப்புகளையும் ஒப்படைத்து, சென்று போதித்து ஞானஸ்நானம் கொடுக்கும்படி பணித்ததும், இந்த அடிப்படையில் அப்போஸ்தலர் பணிபுரிந்ததும் படிப்போர் கண்ணுக்குத் தென்படாததாகிவிடும். முழு உண்மையையும் ஒத்துக்கொள்வதானால் நமக்கு வழிவகுத்துத்தரவந்த இறைமகன் கிறிஸ்து புனித இராயப்பரைத் தம் சபைக்கு மந்தைக்கு தலைமைப் பொறுப்புடையவராக நியமித்துச் சென்றார் என ஏற்று விசுவசிக்க வேண்டும்.        

No comments:

Post a Comment