Sunday, 11 January 2015

இன்றைய கத்தோலிக்க ஆலயங்கள்



இன்றைய கத்தோலிக்க ஆலயங்கள்
ஞாயிறு கடன் திருநாட்களில் பூசை காண வேண்டும் என்பதற்காகத்தான் கோவிலுக்குப் போகிறேன். திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்கிற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்தபடியினாலே நானும் உறுதியாக விசுவசிக்கிறேன் என்ற பழைய உத்தமமனஸ்தாப செபமுடிவு இன்னும் என் நிலைவில் இருப்பதால் தான் என்ன மாற்றம் வந்தாலும் பேசாமல் இருக்கிறேன். ஆனால் இன்றைய குரு துறவியருடைய நடவடிக்கைகள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. கோயிலில் அவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் எரிச்சலையும் குழப்பத்தையும், கோபத்தையும் தூண்டுவதாகத்தான் இருக்கிறது. என்றாலும் வாயைத் திறந்தால் பழிவாங்கிவிடுவார்கள் (அவர்களுடைய கல்விநிலையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியைகளை தூரந்தொலைவிற்கு இடமாற்ற மாறுதல், வேலையை காலி செய்து விடுதல்) நமது உலக வசதிகள் மட்டுமல்ல, ஆன்ம காரியங்களும் தடைபடுமாகையால் எதற்கும் ஒன்றும் சொல்லாமல் “ஆமா சாமிபோட்டுக்கொண்டு பொய்வேடம் பூண்டு வாழ்கிறோம்.......என்பவர் பலர்.
     குருக்கள் தமக்கு விண்ணிலும், மண்ணிலும் சகல அதிகாரங்களும் இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்கள் துறைக்கல்விப் பயிற்சி மற்றவர்களுக்கு இல்லாததல் அவர்களை யாரும் தட்டிக்கேட்க முடியாது என்று தைரியம் ஒரு பக்கமும், மற்ற துறைகளில் எவ்வளவோ பாண்டித்தியம் பெற்றவர்கள் முன் இவர்களது உலகக் கல்வி ஞானம், சூனியம் என்ற தாழ்மை மனப்பான்மை (Inferiority complex) ஒரு பக்கமும் இவர்களை தாழ்ச்சியும் தன்னடக்கமும் இன்றி முரடர்களாய் மூர்க்கர்களாய் நடக்கச் செய்கிறது. ஆன்மீகப் பயிற்சியின்றி ஆணவம், போட்டி, பொறாமை, சதி, சூழ்ச்சி, பொருளாசை, புலன் இன்பங்கள் முதலிய வேகங்கள் முன் இவர்கள் காற்றில் பறக்கும் தூசியாக, துரும்பாக மாறி அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பெரும் இடைஞ்சலாக ஆகிறார்கள். கோள் சொல்பவர்கள் இவர்களை வைத்துப் பிழைக்கிறார்கள் என்பதை உணர்வதில்லை. அல்லது பிறர் மீது கொண்ட பகையினால் அவர்கள் மேல் இவர்களை நாய்களைப் போல் ஏவி விடுகிறார்கள் என்பதை உணரக்கூடிய நிதானபுத்தி இவர்களிடம் கிடையாது. தீர விசாரியாமல் பிறர் மேல் நடவடிக்கை எடுப்பது பாவம் எனும் உணர்வின்றித் தம் அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்து (Misuse) தமக்கடியில் உள்ளவர்களைத் தண்டிக்கிறார்கள். இதனால் இவர்களை உள்ளத்தில் மதிப்பவர் இவர்களது இழிநிலையை அறியாத மிகவும் சொற்பமான அப்பாவிகள் தான்.
     குடும்பத்தில் ஒருவர் சாமியார் அல்லது கன்னியராகி விட்டால் அவரது வீட்டாரது பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை இன்று பரவலாக தென்படுகிறது. எனவே இவர்களது அழைப்பு இறைவனால் வருவது என முடியாது. அப்படியே வந்தாலும் இவர்கள் தம் சுய நலத்துக்காகவும் தம் உற்றார் சுற்றத்தாருக்காகவும் சுகபோக வாழ்வுக்காகவும் வாழ்கிறார்கள். உண்மையான அழைப்பும் அர்ப்பணமும் உள்ள குரு துறவியர் இன்று அபூர்வமாகி வருகின்றனர்.
     என்ன பணியை மேற்கொண்டாலும் அதிலிருந்து பணத்தையும் புகழையும் சுரண்டிக்கொள்வதில் அரசியல்வாதிகளுக்கும், இவர்களுக்கும் வேறுபாடு இல்லை. எனவே இவர்களது கோயில் உரைகளும் மோட்ச, நரக பாவ புண்ணிய, இரட்சண்ய சம்மந்தமுள்ளனவாய் இல்லாமல் உலோகாதயக் கோட்பாடுகளுக்குள்ளேயே அடங்கி மக்களையும் திருச்சபையையும் குழப்பத்துக்கு உள்ளாக்குவனவாய் அமைகின்றன. யார் சொல்லையும் கேட்கும் பக்குவம் இவர்களிடம் இல்லை. இந்தத் தான் தோன்றிகள் நடத்தும் வழிபாடு எப்படி இருக்கும்?
     இன்றைய பூசை நடக்கும் பீடம் என்பது ஏதாவது ஒரு பெரிய அல்லது சிறிய மேசையாகும். (பீடத்தின் நடுவில் அர்ச்சிஸ்ட்ட கல் முன்புள்ள பீடங்களில் இருக்கும்) அதன் ஒரு பக்கம் குருவும் மறு பக்கம் மக்களுமாகும். அனைவரும் ஒன்று கூடி வந்து ஒருவர் ஒருவரோடு கலந்து பழகி, கைகுலுக்கி சிரித்து, தத்தம் கருத்துக்களை அச்சம் கூச்சம் எதுவும் இன்றிப் பகிர்ந்து மகிழ்வதற்கு இது வாய்ப்பை அளிக்கிறது. பெண்கள் மினுக்காகப் பீடத்துக்குள் பணிபுரிவதால் அவர்கள் தோற்றத்தைக் கண்கூசாமல் பார்த்து சுவைப்பதற்கு இளைஞர்கள் கூடி வரத் தூண்டும் சூழ்நிலை கோயிலுக்குள் கிடைக்கிறது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்குக் கோயில் கவர்ச்சியான ஓர் ஊர்ச்சாவடி ஆகிறது. பூசைப் பணம், காணிக்கைப் பொருட்கள், இளம் பெண்களுடைய காந்தம் முதலியவை குருக்களுக்குப் பலவகைகளில் ஆதாயமாகின்றன. இளைஞர்கள் அவர்களைச் சுற்றி வருவதால் தாம் எதையோ சாதித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இதற்குத் தான கோயில் குளங்களை அரும்பாடுபட்டு அமைத்தளித்தார்கள் நம்முன்னோர்கள்? இப்படியெல்லாம் நரவலில் முளைத்த பயிராக வருங்கால சமுதாயம் கோயிலில் உருவாகும் என அவர்கள் நினைத்திருந்தால் அதற்காகத் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தத்தம் செய்திருப்பார்களா? அவ்வாறு தத்தம் செய்த வகைகளை அவர்களுடைய வாரிசுகள் மீண்டும் தங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டால் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். அப்படி ஒரு சூழ்நிலை வராமல் போகாது என நினைக்கிறேன். 1965க்கு முன் இருந்த கோயில் அமைப்பு வழிபாடு, பக்தி பரவசம் வாழ்க்கைப் பக்குவம் யாவற்றையும் அனுபவத்தில் கண்டவர்களுக்கு இன்றைய போக்குகள்  விபரீதமாக, தாறுமாறுகள் நிறைந்ததாக, எரிச்சலை ஊட்டுவதாக, நாளுக்குகொரு பேச்சும் பாடமும் குழப்பமும் எழுந்து அமைதியை அழிப்பதாக, மோட்ச கதியை மறந்து நாத்திக நரக பாதையில் போவதாகத் தோன்றுவது 1965க்குப் பின் பிறந்தவர்களுக்கு வியப்பாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
     இன்று இளந்தலைமுறைகள் பிற மறை நிறுவனங்களில் கல்வி பயில்கின்றனர். 1965க்குப் பின் பிறந்த அவர்களது பெற்றோருக்கு நம் பரம்பரையான கத்தோலிக்க வாழ்க்கை முறை அனுபவமில்லை. படிப்படியாக திருச்சபை திருவை இழந்து தடம் புரண்டு திசை மாறிப்போவதை இயல்பானதாக நினைக்கிறார்கள் அவர்கள். கத்தோலிக்க நிறுவனங்கள் பரம்பரையாக வந்த போதகங்களை விட்டுவிட்டு எதையெல்லாமோ சொல்லிக் கொடுப்பதால் கத்தோலிக்கக் கல்வி என்பது இன்று இல்லை.
     விசுவாச அடிப்படைகளும் சன்மார்க்க சட்டங்களும் உணர்வுக்குள் வராத ஒரு கிறிஸ்துவம் (கத்தோலிக்க மறை) இன்று நம் கோயிலைச் சுற்றி உருவாகி விட்டது. இதை உணர்த்துபவர்கள் பழைமை விரும்பிகளாகப் பழிக்கப்படுகிறார்கள் : சீக்கிரம் செத்து விடுவார்கள் : பிறகு நாம் வைத்தது தானே சட்டம் என்று இளம் குரு துறவியர் நினைக்கத் துணிந்து விட்டனர்.
     ஞாயிறு அனுசரனை இன்று இல்லை. எல்லா இடங்களிலும் சரீர பிரயாசையான வேலைகள் நடக்கின்றன. கோயிலுக்குப் பலர் போவதேயில்லை. ஏன் வரவில்லை என யாரும் அவர்களைக் கேட்பாரும் இல்லை. கோயில் மாற்றங்கள் எவ்வளவு கசப்பாக இருந்தாலும் பழைய ஆட்கள் கோயில் செல்கின்றனர். இளைஞர்கள் குரு துறவியரது வலைக்குள் சிக்கியவர்கள் மட்டும் கோயிலில் முதல் ஆளாய் நிற்கின்றனர் : இவர்களை  நம்பித்தான் கோயில் நடக்கிறது. ஆனால் எல்லா வீடுகளிலும் குடும்ப அட்டையும் வசூலும் இருப்பது தெரிகிறது. இதைக் கொண்டுதான் பெயர் வைப்பது, தாலிக்கட்டுவது, புதைப்பது ஆகிய மூன்றும் நடக்கிறது. இவைகளைக் கொண்டும், நிறுவனங்களைக் கொண்டும் குரு துறவியருக்கு நல்ல துட்டு (மறைமாவட்டப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து சமய ஆசிரியர், ஆசிரியைகளிடம் தங்களது மாத வருவாயில் ஒரு சதவீதத்தை நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது (என்ன கொடுமை) பாவ உணர்வும், பாவ சங்கீர்த்தனம், தப முயற்சிகள் வாடிக்கையான கட்டுப்பாடுகள் அனுசரணைகள் எதுவும் இல்லை. அதே சமயத்தில் விழாக் கொண்டாட்டங்கள் கோயில் வரும்படியின் சாதனங்களாயிருப்பதால் விடாமல் நடத்தப்படுகிறன. இவற்றில் கத்தோலிக்கரை விட பிறரே அதிகக் காணிக்கைகளைக் கொடுக்கின்றார்கள் என வேண்டும். இது தான் கசப்பான உண்மை நிலை. இந்த நிலையில், தம் பாவ உணர்வை மழுப்புவதற்குப் பெந்தகோஸ்த்துக் கூட்டம் உதவுவதால் பலர் அங்கே செல்கின்றன்ர். இவர்களிடம் அருட்சாதனங்களும் அதிகார உரிமை கொண்ட நிருவாகமும் இல்லை. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் : பைபிளைப் பிடித்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் வாதிக்கலாம். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது கத்தோலிக்கத்துக்குள் நன்றாக வளர்ந்து விட்டது. மாதா, புனிதர், உத்தரிப்பிடத்தோர் பற்றிய நினைவு மங்கிவிட்டது. எம்மதமும் சம்மதம் : எல்லோருக்கும் மோட்சம் : உரிமைப் போராட்டம் தேவை என்பதே கொள்கை. திருப்பலியில் இன்னும் பல பழைய செபங்கள் இருக்கின்றன. ஆனால் அவை கவனிக்கப்படுவதில்லை. சடங்காச்சாரங்கள் பீட அமைப்பிலிருந்து, அப்ப ரசப் பகிர்வு வரை அத்தனையும் பதிதர் என்று 1965வரை கண்டனம் பண்ணப்பட்டவரது பாணியைச் சேர்ந்ததாகும். ஏன், போதக நூல்களும் விவிலியம் பூசைப் புத்தகம் யாவும் அவர்களுடைய வாதங்களை ஆதரிக்கும் பாடங்களைக் கொண்டனவாக மாற்றப்பட்டுள்ளன. பேயின் தலையை நசுக்கப்போவது மாதா அல்ல. மாதா கன்னியல்ல : அவள் கருவுற்றிருக்கும் ஓர் இளம் பெண். சேசுவைப் பெற்ற பின் சூசை அவளுடன் உடலுறவு கொண்டார் : வேறு பிள்ளைகளைப் பெற்றார்.. இன்னும்  திருச்சபையின் தலைமை இடம் பாப்பு அல்லது மேற்றிராணிமாரிடம் (சீமோன் இராயப்பர், மற்ற அப்போஸ்தலரிடம்) இல்லை. அப்போஸ்தலர்களின் விசுவாசம் எனும் பாறை மீதே கட்டப்பட்ட திருச்சபை இது. பாறை என்பது சீமோன் இராயப்பர் இல்லை. இனி கத்தோலிக்க விவிலியம் இல்லை : கொடுக்கப்பட மாட்டாது : இருக்கிற பழைய புத்தகங்களெல்லாம் அடுக்காளைக்குள் போடப்பட்டுவிட்டன. பொது விவிலியம் தான் இனி விலைக்குக் கிடைக்கும் : ஆசிரியர், புதுத் தம்பதிகள் .... மற்றும் சாமியாரை அண்டுவோர் அனைவருடைய தலையிலும் வைத்துக்கட்டப்படும். என்னே கத்தோலிக்க ஆயர் குரு துறவியரின் கொடுமை, சதி, திருட்டு வேலைகள்.
     பாப்பனவர் சொல்வதைக் கேட்காமல் கையில் நன்மை வாங்குவதை எதிர்த்து ஒரு சாத்தான் கூட்டம் சுற்றிக்கொண்டு திரிகிறதாம். உணவு, உறவு, பகிர்தல், நீதி, விடுதலை வேட்கை முதலிய உலோகாதயப் பண்புகளைத்தான் நற்கருணை குறித்துக் காட்டுகின்றதாம். இவற்றை ஓரங்கட்டி நற்கருணையில் பிரசன்னம் தேவையற்ற வாதங்களால் மையத்தில் வைக்கப்பட்டுவிட்டதாம் : பதிதரை கண்டனம் செய்வதில் பல நூற்றாண்டுகள் உருண்டோடி விட்டனவாம். இன்று இந்நிலை மாறி மேற்படி பண்புகள் மையத்துக்கும் நற்கருணையில் பிரசன்னம் ஓரத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளனவாம் : ஆகையால் அதைக் கையில் வாங்குவதால் ஒன்றும் தப்பு இல்லையாம்.  இதை எந்தப்பாப்பனவர் சொன்னார்? அப்படிச் சொன்னால் அவர் இன்னும் கத்தோலிக்கர் ஆவாரா? எந்த ஆயர் குழு சொல்லிற்று? இது தான் நற்கருணை என்று போதித்தால் எந்த ஆயருக்கு யார் தான் கீழ்ப்படிய வேண்டும்? நற்கருணையே ஒன்றுமில்லையே, பிறகு ஆயரும் அவரது கூலிப்படையாகிய குரு துறவியரும் ஒரு பொருட்டா?
     ஆயர் குழுவும் குரு துறவியரும், விடுதலை இறையியல் எனும் நாத்திகத்தை எல்லா சாதனங்கள் மூலமும் பரப்பி வருகிறார்கள். திருப்பலியில் வந்த மாற்றங்களின் கொள்கையும் ஆகமங்களின் கொள்கைத் தொகுப்புகளும் மேற்படி “இரைஇயல் நாத்திகமுமே. இவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் துரோகிகள், மந்தைக்குள் புகுந்த ஓநாய்கள், இவர்களை விரட்டியடிப்பதே விசுவாசிகளின் பணி. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுவரனை நேசி. முந்த முந்த விண்ணரசைத் தேடு. கடவுளையே அண்டினாலும் உலோகாதயக் கண்ணோட்டத்தோடு மட்டும் அண்டுவது ஒருவகை நாத்திகமே. அந்தும் துருவும் அறிக்காத இடத்தில் சேர்த்துவை.
                    
                            

No comments:

Post a Comment