Wednesday, 14 January 2015

விசுவசித்தால் சேசு தருவாரா ?



விசுவசித்தால் சேசு தருவாரா ?
பெரும்பாலோனோர் சாமியைத் தேடுவதே பிரச்சனைத் தீர்வுக்காகத்தான்.  பிரச்சனைத் தீர்ந்ததும் இவர்கள் சாமியையும் அவர் சமையத்தையும் மறந்து விடுவார்கள்.  சேசுவிடம், லூர்துமாதா, வேளாங்கண்ணிமாதாவிடம், புனிதர்களிடம், சித்தர்களிடம் ஆயிரக்கணக்கானோர் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெற்றாலும் ஆதிசபையில் அப்போஸ்தலரிடம் சேர்ந்திருந்தது 120 பேர் தான்.
        பிரச்சனைத் தீர்வை வைத்து எந்தச்சாமி – சமயத்தின் உண்மையையும் எண்பிக்கமுடியாது.  மோயீசன் செய்ததுபோல் மந்திரவாதிகளும் செய்தனர்.  இன்றும் செய்கின்றனர்.  எதனால் எந்த அளவிற்குப் பிரச்சனைகள் தீரும் என்பது நம் கணிப்புக்கு உட்படாத ஒன்றாகும்.  அதைவைத்து மன, மதம் மாறுபவர்களைத் தடுக்கவும் முடியாது.  சேசு ஒருபோதும் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கிறேன் வாருங்கள் என்று விளம்பரப்படுத்தவில்லை.  ஆனால் வந்தவர்களை விசுவசித்தவர்களைக் குணப்படுத்துகிறார்.  சுமை சுமக்கிறவர்களைத் தேற்றுவேன் வாருங்கள் என்கிறார்.  இது பாவச்சுமையா ? பிரச்சனை சுமையா ? தம் விண்ணரசை விளக்கி நிறுவுவதில்தான் அவர் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.  என் பெயரால் கேட்பதையெல்லாம் தந்தை தருவார் என்கிறார்.  ஆனால், எப்படி எதைக்கேட்கவேண்டுமென்றும் கற்பிக்கிறார்.  விசுவசித்தால் எல்லாம் நடக்கும் என்கிறார்.  ஆனால் விசுவாசமே கடவுள் அருளால் தான் வரவேண்டியது.  விசிவசித்த அப்போஸ்தலர்களுக்கும் எல்லாம் சுகபோகமாக அமையவில்லை.  அவர்கள் பல இம்சைகளுக்கும் கோர மரணத்திற்கும் உள்ளானார்கள்.  நீ விசுவசிப்பதால் குணமாகுமா ? அல்லது குணமானால் விசுவசிப்பாயா ? யோசித்துப்பார்.! ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு புதுச்சாமியை அனுகுவாயா ? அல்லது எதுவந்தாலும் சாமியிடம் பிரமாணிக்கமயிருப்பாயா ? விசுவாசம் என்பதே வாழ்விலும் தாழ்விலும், இன்பத்திலும் துன்பத்திலும் அவரை ஏற்று அவருக்குப் பிரமாணிக்கமாயிருப்பதே: பிரச்சனைகள் எதனால் தீருகின்றன என்பதை எண்பிக்க இயலாது.  நம்பி அழுது உருகி செபித்தால் பிரச்சனைகள் தீரும் என்பீரா ? எப்பொழுதுமா ? ஏன் அப்படிநம்பி அழ எப்போதும் நினைவு எழுவதில்லை ? ஒரு பிரச்னை தீர்ந்தால் அடுத்த பிரச்சனை வரும் தப்பிக்க முடியாது.  இது உலக அமைப்பு மனிதர் நினைப்பதையெல்லாம் செய்து வைக்கும் சாமியோ சக்தியோ எங்கும் இல்லை: இறைவன் சித்தமே நம் பாக்கியமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.  உண்மையான செபத்தில் ஒன்று பிரச்சனைகள் தீரும்; அல்லது இறைவன் திருவுளத்தை ஏற்பதில் அதிகப்பற்றுதல் ஏற்படும்.
குறிப்பு: சிலரது போதகமே தங்களை உயர்த்திக்கொள்ளும் வகையாக இருக்கிறது.  தம் செபத்தால் யாவருக்கும் பிரச்சனைத் தீரும் என விளம்பரப்படுத்துகிறார்கள்.  இது உண்மையானால் உலகில் ஒரு பிரச்சனையும் இல்லாமல் போகும்படி செபிக்கட்டுமே! கர்த்தர் இதோ வருகிறார், அதோ வருகிறார்... என்று மக்களைப் பயம் காட்டி மனந்திருப்ப முயல்கிறார்களாம்.  இது ஒரு பொய் பிரச்சாரம் நம்பாதீர்கள் என்று ஆண்டவர் சொல்கிறார்.  காட்சி 20 ன் படி தாங்கள் மட்டும் கர்த்தருடன் நடுவானத்தில் 1000 ஆண்டு (ஆயிரம் ஆண்டு) வாழ்வார்களாம்.  இது ஒரு தவறான விளக்கம்.  ஆயிரம் ஆண்டு என்பது நெடுநாள்.  நடுவானம் என்பது இவ்வுலகிலேயே மோட்சவாழ்க்கை வாழ்வதாகும்.  இது கிறிஸ்து உயிர்த்ததிலிருந்து உலகம் முடியும் வரை உள்ள காலகட்டத்தில் அவரிலேயே கலந்து வாழ்வதைக் குறிக்கும்.  அதற்குப்பின் சாத்தானுக்கு இடம் தரப்படும் என்பதை அதோடு சாத்தான் சோதிப்பதற்கும் இடம் உண்டு என உணர்க.  இதை மாற்றி, ஆயிரம் ஆண்டு நடுவானத்தில் வாழப்போகின்றோம்...பிறகு சாத்தான் சோதனை வரும் என்பது ஆகமத்தை பரிகாசம் பண்ணுவதாகும்.  கர்த்தர் மீண்டும்வருவதுஉலக முடிவில் யாவருக்கும் இறுதித்தீர்ப்பு அளிக்கவே.  ஒவ்வொரு செயலிலும் இதை நினைவிருத்த வேண்டுமென்பதே வருகை பற்றிய உண்மைப் போதகம்.  யாராயினும் கிறிஸ்துவைப் போதிக்கும் அளவுக்கு நல்லதுதான்;  ஆனால் கத்தோலிக்கத்தின் போதகத்தை அனுசரித்துப் போதிப்பதே மோட்சம் தரும் போதகமாகும். 
இரட்சிக்கப்பட்டுவிட்டோமா?
       இஸ்பிரித்து சாந்துவால் ஞானாஸ்நானம்: சுட்டப்படுவது “பாஷை” பேசும் வரமாகும்.  இராயப்பர் தம் பாஷையில் பேசினார்.  ஜனக்கூட்டத்தில் உள்ளவர் தத்தம் பாஷையில் புரிந்துகொண்டனர்.  இந்நிகழ்ச்சி மறுபடி எந்த இடத்திலும் நிகழ்ந்ததாகச் சொல்லப்படவில்லை உள்ளப்பூரிப்பினால் பொங்கி எழும் குரல் பரிசுத்த ஆவியின் நிரப்புதலால் ஏற்பட்டதாக அப்போஸ்தலர்பணியில் சொல்லப்படுகிறது.  1 கொரிந் 12-14 ல் இப்படிப் பேசுபவரே பெரியவர் என நினைத்தவரைக் கண்டித்து எல்லோருமா பாஷை பேசுவார்கள்? அவரவர்க்கு அவரவர் வரம் உண்டு; எல்லோருக்கும் வேண்டியது அன்பு; அது உங்களிடம் இல்லை என்பதைச் சின்னப்பர் சுட்டுகிறார்.  இந்த பாஷை பூரிப்பால் எழுவது அதன் பொருளை விளக்குபவர் இருந்தால்தான் பேசவேண்டும் என்கிறார் புனித சின்னப்பர்.  பூரிப்பால் பொங்கி எழுவதை விளக்குபவர் இல்லை என்பதற்காக எப்படி நிறுத்தி வைக்க முடியும்? இது ஏற்பட்டால்தான் பரிசுத்த ஆவி வருகிறார் என நினைப்பவர் ஆடல்பாடல் மேளதாளம் கூச்சல் கும்மாளம் முதலியவற்றால் நரம்புகளைத் தூண்டி எழுப்பி அரற்றுகிறார்கள்.  இப்படியெல்லாம் செய்து பரிசுத்த ஆவியை மடக்கிவிட முடியுமா ? ஆண்டவரும் அப்போஸ்தலரும் இப்படிச் செபித்ததாக நற்செய்திநூல்களில் எங்கும் இல்லையே..!
      சேசு என்ற பெயரை மீட்பின் அடிப்படையில் (இரட்சண்ய) உச்சரிப்பதும் பரிசுத்த ஆவியின் அருளால்தான் சாத்தியமாகும்.  தெளிவான புத்தியுடன் சேசுவுக்காக வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் பரிசுத்த ஆவியால் தான் வரும்.  பரிசுத்த ஆவியைக்காட்ட முடியாது, உணரமுடியாது அவரை விசுவசிக்கின்றோம்.  பரிசுத்த ஆவியாலும் நெருப்பினாலும் ஞானாஸ்நானம் என்றால் கட்டைகளை பரற்றி நெருப்பு ஏற்றி அதில் ஆட்களைப் போட்டு வதக்கி எடுப்பதும்கூடப் பொருத்தமாக வரலாம், ஆவியும் கிளம்பும். பாஷைகள் பல பேசப்படும்... இதெல்லாம் கூச்சல்கும்பலின் வித்தைகள்.  உனது உள்ளம் தூய ஆவியால் நிரம்பினால் அதை நீ நற்செயல்களால் காட்டு.  தம்பட்டம் அடித்துக்கொள்ளாதே.  பாஷை பேசுவதால் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்பவர் தம்மையே திருப்திப்படுத்திக்கொள்கின்றனர்.  கிறிஸ்துவின் சொற்படி கதோலிக்க அருட்சாதன அன்பு வாழ்க்கை வாழ்பவர்தான் இரட்சண்ய வழியில் செல்கிறார்.           

No comments:

Post a Comment