Saturday, 29 November 2014

அர்ச்.தமதிருத்துவ சத்தியம்



அர்ச்.தமதிருத்துவ சத்தியம்
     வரலாற்றில் வளர்ச்சி பெறுகிறது. ஒரே கடவுள் மூன்று ஆளாயிருக்கிறார். என்பது திருமறைப்போதனை. அதை நாம் விசுவாசத்தால் ஏற்றுக்கொள்கிறோம். அது எப்படி இருக்க முடியும் என்பது தான் புரியவில்லை. படைக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்ட மனித அறிவு சாதாரணமாக வரம்புக்கு உள்பட்டவைகளைத்தான் அறிந்து கொள்ளமுடியும். மனிதன் காலம், இடம், எண் போன்ற வரையறைகளுக்கு உட்பட்டே இயங்குகிறவன் என்பதால் அவற்றிற்கு அப்பாற்பட்டதை அவனால் உணரமுடியவில்லை.
     ஒரே கடவுள் மூன்று ஆள் என்றதுமே எண் அளவை முன் நிற்கின்றது. அதையே சிந்திக்கிறான் மனிதன். ஆனால் தமதிருத்துவம் எவ்வித வரம்புக்கும் உடபட்டதன்று. படைப்புகளுக்கு உரிய இப்பண்புகள் படைக்கப்படாத கடவுளுக்குப் பொருந்தாதவை. இவற்றையெல்லாம் கடந்தவர் தான் கடவுள். முதலில் இக்கருத்தை மனதில் பதியவைக்க வேண்டும்.
     கடவுள் ஒருவர் என்பதில் ஒன்று என்பது எண் அளவையிலுள்ள ஒன்று அல்ல. ஒருவர் என்றால் (Unique) ஏகம் என்று பொருள்படும்.
     ஒரே கடவுள் மூன்று ஆளாயிருக்கிறார் எனபதில் மூன்று என்பதும் எண் அளவையிலுள்ள மூன்று அல்ல. படைக்கப்பட்ட அறிவுக்கு எட்டாத ஒரு தெய்வநிலை இது. இத்தெய்வநிலையை உணர்த்தக் கூடிய அம்சங்கள் படைப்புகளில் இல்லை. எனவே மனித அறிவுக்கு எட்டாத ஒரு நிலை அது. தெய்வ அருட்துணையால் செபம் தியானத்தால் புனிதர்கள் ஞானிகள் முதலானோர் தியானித்து உணர்ந்து நமக்கு அறிவிக்கும் ஒரு விளக்கம் யாதெனில், மனித வார்த்தைகளால் கூற முடிந்த ஒரு விளக்கம் யாதெனில் ; கடவுளின் என்றென்றும் நிலையாயுள்ள இரு அம்சங்கள் (Two eternal aspects) அகத்தில் அப்படியே நிலையாயிருக்கும் அம்சத்தை (Eternal Static aspectad intra) ஒன்று என்றும் (ஒரே கடவுள் என்றும்) புறத்தில் ஆற்றல் உள்ள அம்சத்தை (External dynamic aspect-ad extra) மூன்று என்றும் (மூன்றாட்கள் என்றும்) விளக்குகிறார்கள். ஆயினும் இதுதான் இறுதியான (Complete and perfect) விளக்கம் என்று யாருமே தீர்மானிக்கவில்லை. ஆனால் மனித அறிவுக்கு ஏதோ ஒருவகையில் எட்டக்கூடிய ஒரு விளக்கமாகும்.
1.இது ஒரு பரம இரகசியம் ((Mystery of Faith)
“தேவ வெளிப்படுத்தலால் அன்றி, அறிய முடியாத கடவுளின் மறைந்துள்ள பரம இரகசியங்களின்(1 Vatic session 3, ch.4-D.S.3015) தமதிருத்துவ இரகசியம் ஒன்றாகும்.
     இதை நமது ஆண்டவர் சேசு தாமே வெளிப்படுத்தினார். “நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா,சுதன்,பரிசுத்த ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் கொடுங்கள் (மத் 28:19).
     தமதிருத்துவம் என்னும் சொல்லோ, மூன்று ஆட்கள் என்னும் சொல்லோ, ஆகமத்தில் இல்லை. ஆனால் தமதிருத்துவ சத்தியத்தின் பெர்ருண்மை பற்பல இடங்களில் காணக்கிடக்கின்றது. (அரு.14:16-17, 12:49, 15:26, 14:19-21 காண்க. 1:29-35. 14:26. 16:15).
     புனித சின்னப்பர் தமதிருத்துவத்தின் மூன்று ஆட்களையும் பற்றித் தெளிவாகக் கூறுகிறார். “ஆண்டவராகிய சேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் (பிதாவின்) அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்களோடு இருப்பதாக (2கொரி 13:`3).
2.ஆகமத்தில் வெளிப்படித்தப்பட்ட இச்சத்தியம் அப்போஸ்தலர்களால் விரிவாகப் போதிக்கப்பட்டது.
     1). Der Balizeth Papyrus இரண்டாம் நூற்றாண்டு விசுவாசத்தை, ஒரே கடவுள் மூன்று ஆட்கள் எனும் சத்தியத்தை இயம்புகிறது.
     2). Apostolic tradition of Hippolytus(215-217) சடங்கு முறைக்கு உதவிய இப்பிரமாணத்தில் பிதா,சுதன்,பரிசுத்த ஆவி எனும் மூன்று ஆட்களைப் பற்றிய தெளிவான பிரமாணம் இது.
     3). அப்போஸ்தலர்களின் விசுவாசப்பிரமாணம் : நாம் அன்றாடம் அறிக்கைபண்ணும் பிரமானம் மூன்று ஆட்களைப் பற்றிய சத்தியங்களைப் பன்னிரண்டு ஆக விரித்துக் கூறுகிறது.
     4).கி.பி.262-ல் பாப்பானவராயிருந்த தியோனிசியுஸ் என்பவர் அலெக்சாந்திரியாவின் ஆயரான தியோனிஸிஸ் என்பவருக்கு விடுத்த ஆவணம்:தமதிருத்துவத்திற்கு எதிராக எழுந்த தப்பறைகளைக் கண்டித்து, சத்தியத்தை நன்கு தெளிவுப்படுத்துகிறது.
3.பாப்பானவர்கள் சிலரின் பிழையான போதனை:-
     தப்பறைகள் பல பரவிக்கிடந்தன. அவற்றைக் கண்டித்த சில தந்தையர்கள் தவறான விளக்கங்களைக் கூறினர். இதனால் தப்பறைகளை மறுப்பதிலும் தவறான விளக்கங்களைத் திருத்துவதிலும் திருமறை கவனம் செலுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. திருமறையின் தந்தையருள் ஒரு சிலர் (Subordinationism) சுதனுக்குரிய பிதாவுக்குச் சரி சமமான நிலையைக் குறைத்துக் கூறும் முறையைக் கையாண்டனர்.
1.     “சுதன் பிதாவினின்று ஜெனித்தவர்என்பதை விளக்கும் போது, ஜெனித்தல் காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறினர் சிலர். (Made the generation temporary and spoke not expressly of any other : These fathers (Popes) Justin, Athenagoras, Theophilus, Tatian, Tertullian and Hippolythus (Waterland Vol:1, Part 2.P:104.)

2.       அலெக்சாந்திரியா ஆயரான தெயோனிசியுஸ் என்பவர் பொருத்தமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் ஆரியுசுடைய தப்பறைக்குக் வித்திட்டார்என்று பசிலியுஸ் குற்றம் சாட்டினார். கி.பி.262-ல் பாப்பரசர் தியோனிசியுஸ் பிறப்பித்த நிருபம் (ஆவணம்) இதைக் கண்டித்துத் திருத்துகிறது.

3.       Hippolytus என்பவர் “சுதன் நித்தியமாய் ஜெனித்தவர்என்பதை அறியாதவர் போல் பேசியுள்ளார்.

4.     Methodius என்பவரும், சுதனுடைய மனிதாவதாரத்தைப் பற்றிப் பொருந்தாத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். (Levia sunt Quaa in Sanctissimam Trinitatem hic Liber peccase dicitur:maran – De Divinitate Christa. P.507-530)

5.     Tertullian : சுதன் காலத்தில் ஜெனித்தவர் என்று கூறியுள்ளர். ஆனால் இக்கொள்கையைத் திருத்திகொள்ள மனமின்றி பிற தப்பறைகளையும் கைக்கொண்டார். “Ut Quod resest dicam, cum valentianism hic et reliquo Gnosticorum grege aliquatenus locutus est Tertullianuns, in re ipsa tamen cum Catholicis Omnino Sensit” (Defens F.N.111: 10 and 15)

நெரிந்த நாணலையும்



நெரிந்த நாணலையும்
1சாமுவேல் 24:4 சவுல் தாவூதின் மீது பொறாமை கொண்டார். தாவீதைக் கொல்வதற்கு எத்தனையோ சூழ்ச்சிகளைச் செய்ய முற்பட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் சவுல் ஒரு குகையிலும் தாவீது அதன் வெளியிலும்  தங்கி இருக்கிறார்கள். சவுல் தூங்கும் நேரத்தில் அவரைக் கொல்ல தாவீதுக்கு நல்ல அவகாசம் கிடைத்தது. அவரோடு  கூடி இருந்தவர்களூம் இதுதான் சமயம் என்று தாவீதை ஏவி விட்டனர். ஆனால் தாவீது சவுலை கொல்ல முற்படவில்லை. சவுலுடைய ஆடையின் விளிம்பை மட்டும் வெட்டி எடுத்துக்கொண்டு சென்றார் (24:12) பிறகு சவுலைச் சந்தித்த போது அந்த ஆடையின் விளிம்பை தம் கையில் இருப்பதைக் காட்டி, உம்மைக் கொல்வதற்கு எனக்கு நல்ல அவகாசம் கிடைத்தாலும் நான் அப்படிச் செய்ய வில்லை. என்னை ஏன் நீர் கொல்ல நினைக்கவேண்டும்(11) என்னிடம் உமக்கு விரோதமான எந்த நினைவும் இல்லையே என்றார்(17) இதைக் கேட்டு சவுல் மனம் மாறி அழுதார்.
     ஆண்டவர் நெரிந்த நாணலையும் முறிக்காதவர். அவரைப் பின்பற்றும் குரு-துறவியர்-விசுவாசிகள் பழிவாங்கலாமா? ஒருவர் ஒருவர் பலவீனத்தைப் பயன்படுத்தித் தம் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலமா? யாரையும் தண்டிக்காத ஆண்டவரது சீடர்கள், இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்றவரது வாரிசுகள், வேண்டுமானால் (மத்.26:53) என் தந்தை நான் கேட்டால் (என்னை பாதுகாப்பதற்கு) பன்னிரண்டு தூதர் படைகளை தரமாட்டாரா என்றவரைப் பின் பற்றிப்போதிக்கும் பதவியாளர்கள், தங்களது சதியாளர்கள என நினைப்பவர்களை அழிக்க, பழிவாங்க நினைக்கலாமா? அல்லது எதிரியின் பலவீனத்தைப் பயன் படுத்தி தம் காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாமா?
     இங்கு நாம் சிந்திக்க வேண்டியது என்ன? குரு-துறவியர் பதவியில் உள்ளவர்களது பிடியில் மற்றவர்கள் இருக்கிறார்கள். பதவியாளர் நினைத்தால் தம் கீழ் உள்ளவரை எப்படி வேண்டுமானாலும் நசுக்கலாம், நசுக்கவும் செய்கிறார்கள். இதற்கு பயந்த விசுவாசிகள் அவர்களுக்கு ஏற்றாற்போல் பேசி நடித்துத் தம் காரியங்களை சாதித்துக் கொள்ளும் போது முகஸ்துதிமுன் மடங்குகின்ற பொறுப்பாளரை வென்று விடுகிறார்கள். ஆக இருசாரரும் ஒருவர் ஒருவரது பலவீனத்தைப் பயன்படுத்திப் பிழைக்கிறார்கள். வேதம் ஓதும் கிறிஸ்துவ சபையின் இலட்சணம் இதுதானா?
     ஞானஸ்நானம், கலியாணம், கல்லறை இந்த மூன்றிற்கும் சாமியார் தயவு வேண்டியிருக்கிறது. வேலை நியமனங்களுக்கும் கையெழுத்துகளுக்கும் குரு-துறவி பதவியாளர் அல்லது முக்கியஸ்தரது பரிந்துரையும் நற்சாட்சி பத்திரமும் இன்றியமையாதவை. இதனால் மக்களது பிடி முழுவதும் திருச்சபையின் நிருவாகத்தின் கையில் இருக்கிறது. இதனால் மக்கள் இந்த நிருவாகம் எப்படி நடந்து கொண்டாலும் கண்டு கொள்வதில்லை. அதைக் கடவுள் கேட்டுக்கொள்ளட்டும் என்கிறார்கள். அவர்களால் சபை அழிகின்றது.
     மக்களது கையில் பணமும் கோள் குண்டனிகளும் இருக்கின்றன. இவை இருக்கும் இடத்தைப் பொறுப்பாளர்கள் நன்றாகப் பயன்படுத்துகின்றனர். கோள் மூட்டுவோரையும் பணம் தருவோரையும் மதித்து அவர்களுக்கு எந்த உதவியும் செய்து அவர்களைக் கருவிகளாக வைத்து, எளிய மனத்தவரையும் இவர்கள் நினைத்ததையெல்லாம் பாராட்டி சாதித்துக் கொடுக்க இயலாத அல்லது முன்வராதவரையும் நேரம் பார்த்து பழிவாங்குகிறார்கள். இதனால் பொறுப்பாளரும் சபையாரும் தவறான நோக்குடனும், முறையிலும் செயல்பட்டுத் தங்கள் சதிகார, கபடமுள்ள மனங்களை மேலும் மேலும் மாசுபடுத்திக் கொள்கிறார்கள்.
     கீழோராயினும் தாழ உரை. உன் பேச்சு ஆம், ஆம், இல்லை, இல்லை என்று மட்டும் இருக்கட்டும். அதற்கு மிஞ்சியதெல்லாம் (மத்.5:37) தீயவனிடமிருந்து வருவதாகும். கிறிஸ்துவைப் பின்பற்றும் யாராயிருந்தாலும் மத்தேயு 5, 6, 7 அதிகாரங்களை தியானித்து உங்கள் மனச்சான்றை அமைத்துக் கொள்ளுங்கள். இந்த மலைப்பிரசங்கம் உங்கள் வாழ்க்கையில் பிரதிபலிக்காவிட்டால் நீங்கள் கத்தோலிக்கத்துக்குள் இருக்கவோ பதவி வகிக்கவோ தகுதி உள்ளவரல்ல.
     அடுத்த யாருடைய பிடியையும் உன் கையில் வைத்துக் கொண்டு அவரை ஆட்டிப்படைக்காதே. சுயேட்சையாக தாராளமனதுடன் பிறரை மதித்து ஊழியம் செய்வதே பெருந்தன்மையான சேவையாகும்.

Tuesday, 18 November 2014

புனித சின்னப்பர்


புனித சின்னப்பர்
     சின்னப்பர் தனி வழிக்காரரா? சின்னப்பர் கதையே ஒரு தனி!?. அவர் சேசுவுடன் கூடி வாழ்ந்து அனுபவித்தவராகத் தெரியவில்லை. கிறிஸ்துவர்களைத்தாக்கி, உபாதித்துக்கொல்லும் எதிரியாவார். முடியப்பரைக் கொல்லும் போது அவர் கிறிஸ்துவரின் எதிரிகளுடைய (சாட்சிகள், கொலைத்தீர்ப்பை நிறைவேற்றுவோர்) துணிமணிகளுக்குக் காவலாய் இருந்தாராம் (அப்.பணி 8:58) தமாஸ்கு போகும் வழியில் விண் ஒளியாகக் கிறிஸ்துவைக்கண்டு கண் ஒளி இழந்த நிலையில் ஆண்டவரே! நான் என்ன செய்யவேண்டுமென்று கேட்ட போது, தமாஸ்கு பட்டணத்துக்குப் போ, அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார் கிறிஸ்து. அங்கே மூன்று நாள் செப, தபத்துக்குப் பிறகு அனனியாவிடம் சென்று கண் ஒளி பெற்று, ஞானஸ்நானம் பெற்று (அ.ப.9:18) புற இனத்தாருக்கும் அரசருக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் எனது பெயரை(புதுமையை) அறிவிக்க என்னால் தெரிந்து கொள்ளப்பட்ட கருவி என்று ஆண்டவர் இவரை அனனியாவுக்கு அறிமுகப்படுத்துகிறார்(9:15) தமாஸ்குவிலேயே கிறிஸ்துவைப் போதித்து யூதர்களை கலங்கடித்தார்(9.22) அவரைத் தொலைக்க யூதர் திட்டமிட்டனர்(23). இது கண்டு கிறிஸ்தவர்கள் கூடையில் அவரை வைத்து நகரவாயிலில் விட்டு மறைமுகமாக வெளியேற்றினர். அவரோ எருசலேம் சீடருடன் சேர்ந்து கொள்ள முயன்றார். அவர்களோ அஞ்சினர். அப்போது பர்னபா அவரை அப்போஸ்தலரிடம் கொண்டு போய் ஒப்படைத்தார். விபரங்களையெல்லாம் அவர்களுக்குச் சொன்ன பின் அங்கே துணிந்து போதித்தார். முக்கியமாக கிரேக்க மொழி பேசுவோரிடம் வாதித்து வந்தார். அவர்களோ அவரைத் தொலைக்கப்பார்த்தனர். சகோதரர்கள் (திருச்சபையினர்) அவரைத் தார்சஸ் நகருக்கு அனுப்பிவைத்தனர் (9:31). அந்தியோக்கியாவில் சிதறிப்போன யூதக் கிறிஸ்துவரிடமிருந்து வேதத்தைப் பெற்ற கிரேக்கர் மனந்திருப்பின செய்தி எருசலேமிற்கு எட்டவே பர்னபா அங்கு அனுப்பபட்டார். அவர் திரளான மக்களை மனந்திருப்பி பிறகு தார்சு பட்டணத்திலிருந்து சவுலை (சின்னப்பரை) தேடிக்கொண்டு வந்து, இருவருமாக அந்தியோக்கியாவில் வேதத்தை போதித்தனர். எருசலேமில் பஞ்சம் ஏற்பட்டபோது அந்தியோக்கியரது பண உதவியைப் பர்னபாவும், சவுலுமாக எடுத்துக்கொண்டுபோய்க் கொடுத்து உதவினர்.(11.30). இதன் பிறகு (அப்.பணி 13:13) சின்னப்பரது வேத போதகப்பணி துவங்கின. அ.ப.15-ல் எருசலேம் பொதுச் சங்கத்தில் விருத்த சேதனம் பற்றிய இராயப்பரின் தீர்மானத்தைச் சவுல், அந்தியோக்கியாவிற்கு எடுத்துச் செல்கிறார்(15:35)
     வெவ்வேறு பயணங்களை மேற்கொண்டு சபைகளை நிறுவியதும், அந்தந்த சபையாருடைய பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களுக்கு வேண்டிய பொறுப்பாளர்களை நியமித்து, புத்திமதிகளைச் சொன்னதும் அப்போஸ்தலர் பணி 15க்குப் பின்னும், மற்றும் நிருபங்களிலும் காண்க. எருசலேமில் முளைத்து வேரூன்றி வளர்ந்து, பரவி கடைசியில் நற்செய்தி சின்னப்பர் மூலம் உரோமாபுரி நோக்கிச் செல்வதை நயமாக லூக்காஸ் வருணிப்பதை அப்போஸ்தலர் பணியில் காண்க. சின்னப்பர் கிறிஸ்துவின் மீட்பு அவரின் அன்பு, இன்பம், மனித பாவநிலை முதலியவை பற்றிய அரிய தம் விளக்கங்களால், முக்கியமாய் புற இனத்தார் மத்தியில் கிறிஸ்துவ அடிப்படைகளை நிலை நாட்டுவதையும், சபைகளைத் தப்பறைகளிலிருந்தும், போலித் தீர்க்கதரிசிகளிடமிருந்தும் கண்ணும் கருத்துமாகச் காத்து நயமாகவும், பயமூட்டியும் விசுவாசிகளைப் பேணிக்காத்து வந்ததையும் காணும் போது, சின்னப்பர் ஒரு தனி என்றே சொல்ல வேண்டும்.
     உரோமன் கத்தோலிக்கர் இராயப்பரையும், புரோட்டஸ்டாண்டர் சின்னப்பரையும் பின்பற்றுகின்றனர் என்று விளையாட்டாகவும் ஓரளவுக்கு வினயமாகவும் கூடச்சொல்லும் ஒரு பேச்சு உண்டு. இதற்கு ஏற்றாற்போல் சின்னப்பர் நான் கேபா(இராயப்பர்)வையே எதிர்த்தேன் (கலா.2:12) (against his face I resisted him) எனவே இவர் இராயப்பரைப் பற்றிச் சட்டை பண்ணவில்லை என்பதாகச் சொல்வதா? நானும் அப்போஸ்தலன்தானே (1கொரி 9:1). நான் மனிதரால் அல்ல, சேசுவாலும், பரமபிதாவாலும் அப்போஸ்தலனாக ஏற்படுத்தப்பட்டவன் (கலா 1:1, தீமோ1:11, 1தீமோ 2:7, தீத் 1:1). இன்னும் போலி அப்போஸ்தலர் பற்றி (2 கொரி 11:5-13)ப் பேசிக்கண்டிக்கிறார். 2கொரி 8:23-ல் நாங்கள் அனுப்பிய சகோதரர்களோ, சபைகளின் அப்போஸ்தலர்கள் : கிறிஸ்துவுக்கு மகிமையாயிருப்பவர்கள்..., அவர்களுக்கு உங்கள் அன்பைக் காட்டுங்கள் எனும் போது சபைகளால் அனுப்பட்டவர் என்ற பொதுப் பொருளில் அப்போஸ்தலர் எனும் பதம் பயன்படுவதைக் காண்க. 1கொரி:15-9-ல் நான் அப்போஸ்தலரிலேயே மிகத்தாழ்ந்தபடிச் சேர்ந்தவன் : திருச்சபையைத் துன்புறுத்தியவனை, காலம் தவறிப் பிறந்தவன் என்றும் சொல்வதையும் காண்க. சின்னப்பரும் பன்னிருவரைப்போன்று அப்போஸ்தலர் தானா? அவர் இராயப்பருக்கு உட்படவில்லையா? சபையில் ஏதேச்சாதிகாரம் பண்ணிக்கொண்டு வந்தாரா? இதனால் இராயப்பர் – பன்னிருவர் ஸ்தானாதிபதிகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று ஒன்றும் இல்லையென்பது பெறப்படுமா?
     எதிர்த்தேன்என்பது மறுக்க முடியாதது. ஆனால் அதிகாரத்தை எதிர்ப்பது வேறு, எதிர்க்காரணங்களைச்சொல்லி வாதாடுவது வேறு. இன்னும், நடிப்பு “பாவலாவுக்காகவும்வெளித்தோற்றத்திற்காகவும் எதிர்த்தேன் என்பது வேறு. வெறும் சொல்லோடுநிற்காமல் நடந்தது என்ன என்பதைச் சிந்திக்கவும்.
     எதிர்த்தேன்என்று சொன்ன அதே கலாத்தியர் நிருபத்தில் 1:18-ல் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப்போனேன், அங்கே பதினைந்து நாள் அவருடன் தங்கியிருந்தேன். மற்ற அப்போஸ்தலருக்குள் ஆண்டவரின் சகோதரரான யாகப்பரைக் கண்டேன் (அவரைத் தவிர வேறு யாரையும் நான் காணவில்லை) என்கிறார். இந்த இருவரையும் காணவும் அவரிடம் பேசவும் வேண்டிவந்த தேவை என்ன? இதற்கு நியாயமான பதிலைக்காண்க : இராயப்பர் திருச்சபையின் தலைவர் என்ற முறையிலும், யாகப்பர் எருசலேம் சபையின் தலைவர் என்ற முறையிலும்தான் அவர்களை மட்டும் எருசலேமில் சந்தித்தார் என்பது பொருத்தமாகாது என்றால், இவர்களை மட்டும் பார்ப்பதற்கென்று பயணம் செய்ய வேண்டிய காரணம் வேறு எதுவாக இருக்க முடியும்?
     விருத்தசேதனம் உள்ளவர்களின் அப்போஸ்தலனாகும்படி இராயப்பருடன் செயலாற்றியவரே, புறவினத்தாரின் அப்போஸ்தலனாகும் படி என்னுள்ளும் செயலாற்றினார். அந்த அருள் எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து, திருச்சபையின் தூண்கள் என மதிக்கப்பட்ட யாகப்பர், கேபா, அருளப்பர் ஆகியோரின் நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்ணபாவுக்கும் கை கொடுத்தனர். விருத்த சேதனம் உள்ளவர்களுக்கு நாங்களும் நற்செய்தி அறிவிப்பது என்று ஏற்பாடு செய்து கொண்டோம் (அதாவது அந்தியோக்கியா சபையார், எருசலேம் சபையாரைப் பஞ்ச காலத்தில் மறக்காமல் உதவ வேண்டும் எல்லாம் ஒரே சபையார் என்பதை நினக்க வேண்டும்) என்று மட்டும் கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு உதவி செய்வதில்தான் நான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன் (2:7-19).
     இதுவரை கேபாவுடைய அதிகாரத்துக்கு எந்த எதிர்ப்பும் இல்லையே? அருளை உணர்ந்து, திருச்சபையின் தூண்கள் எனப்பட்டவர் கைகொடுத்து, ஏழைகளை மறக்கலாகாது என்று நினைவூட்ட அதன்படியே தான் நடந்து கொண்டதாகச் சொல்லும் போது அதிகாரத்துக்கு விரோதமான எதுவுமில்லையே! (ஆங்காரியாய் அடக்கி) அதிகாரம் பண்ணுவது சரியல்ல என்று ஆண்டவர் (மாற்கு 10:42) சொல்லியிருக்கிறார். பொறுப்பை நிறைவேற்ற பணித்திருக்கிறார். இதன்படி தூண்களாய் இருந்து கேபா முதலியோர் கைகொடுப்பதும் அவர்களது நிபந்தனைகளுக்குச் சின்னப்பர் உட்பட்டுச் செயலை புரிவதுமே இங்கே விளங்குகிறதேயொழிய, அதிகார மறுப்பு இங்கு இல்லையே! அந்தியோக்கியாபுரி வந்த போது கேபா செய்வது கண்டனத்துக்குரியது என்பதற்காக நேருக்கு நேராக எதிர்த்தேன் என்கிறார். கேபா என்ன செய்தார்? ஏன் நேருக்குக் நேராக எதிர்த்தார்?
     கிறிஸ்து சேசுவுக்குள் யூதனென்றும் அன்னியன் என்றும் இல்லை. இந்த அடிப்படையில், அந்தியோக்கியாபுரி வந்த இடத்தில் கேபா பிறப்பால் யூதனாயிருந்தும் புறவினத்தாருடன் கலந்து உண்டு வந்தார். ஆனால் ஒரு நாள் எருசலேமிலிருந்து யாகப்பரைச் சேர்ந்த சிலர் அங்கு வந்த போது அவர்கள் என்ன சொல்வார்களோ எனப்பயந்து, அன்றிலிருந்து புற இனத்தாரோடு கலந்து உண்பதை நிறுத்திக் கொண்டார் இவ்வாறு இன வேறுபாடு காட்டித் தங்களை ஒதுக்கப்பட்ட, கீழ் இனத்தவராக மதித்தார் என்று அந்தியோக்கியாவின் புற இனத்தார் மனது புண்பட்டு, வருந்தி முறையிடத்துவங்கினர். அந்தியோக்கியா அப்போஸ்தலரான பர்னபாவும் கூட கேபாவை பின்பற்றத் துவங்கக் கண்டதும், புற இனத்தார் முறையீடு அதிகமாவது இயல்புதானே? இனி அவர்களைச் சாந்தப்படுத்துவது யார்? எப்படி?
     சின்னப்பர் ஒருவர் தான் மிஞ்சினார். இராயப்பர் செய்வது சட்டப்படி சரியோ, தவறோ. அது பற்றிக்கேள்வியில்லை. ஆனால் அவர் செயலால் இன்று தம் சபையினர் முறையிடுவது மட்டும் தெளிவு. எனவே இவர்கள் எல்லோரும் பார்க்கும் படியாக இராயப்பரை நேருக்கு நேராகக் கண்டனம் பண்ணினால் தானே இவர்கள் மனது நிம்மதி அடையும்! எனவே தான் இதை ஒரு பெரிய தவறாகக்காட்டி இராயப்பருடன் வெளியளவில் வாதாடுகிறார். இதனால் புற இனத்தாருக்கு திருப்தி ஏற்படுமல்லவா? எதிர்த்த விபரம் இவ்வளவுதான்.
     இதை ஏன் இவ்வளவு பெரிதாகக் காட்டி இங்குச் சொல்கிறார்? இந்த நிருபத்தில் சின்னப்பர் கோபக்கனலைக் கக்குவதை காண்க. ஓ அறிவிலிகளான கலாத்தியரே! உங்களை மயக்கியவன் யார்? (3:1) நான் சொன்னதை விட்டு விட்டு நீங்கள் பழைய சட்டங்களைக் கடைப்பிடிப்பது ஏன்?  கிறீஸ்து – விசுவாசத்தால் மீட்படைகிறோம் என்றல்லவா நான்சொல்லியிருக்கிறேன்!. என் சொல்லை நீங்கள் மதிக்காமல் போனது என்ன? நான் யாரென்று உங்களுக்கு ஏன் தெரியாமல் போய்விட்டது?  திருச்சபையின் தூண் எனக்கூடிய கேபாவையே நான் எதிர்த்துக் கண்டித்துப்பேசியிருக்கிறேன். என்னை லேசாக  நினைத்துக்கொள்ளவேண்டாம் (கமாலியேலிடம் யூதச் சட்டங்களை கற்றுத் தேர்ந்தவன்) உங்களை நான் சும்மா விட்டு விடுவேன் என்று நினைக்காதீர்கள்.. என்று அச்சுறுத்தி வழிப்படுத்தும் தோரணை புரியவில்லையா? தூணாயிருந்து கை கொடுத்து அனுமதித்த தலைவரையே துணிந்து எதிர்த்தவன் நான் : உங்களைச் சும்மா விடமாட்டேன் எனும் தோரணையைச் கவனிக்கவும். இதில் சின்னப்பர் இராயப்பரைத் தமக்கும் மேற்பட்டவராகக்  கருதுகிறாரா? சம்மானவராகவோ – தாழ்ந்தவராகவோ கருதுகிறாரா?
     அந்தியோக்கியாவில் எதிர்த்தது புற இனக்கிறிஸ்தவரைச் சாந்தப்படுத்துவதற்காக ஆகும். அச்சம்பவத்தை கலாத்தியருக்கு நினைவூட்டி தான் யாரென்று காட்டும் போது, அதில் இராயப்பர் தனக்கு மேற்பட்டவர் என்பதைச் சொல்லாமல் உணர்த்துவதைக் காண்க.
     இராயப்பருடைய தவறு அப்படி ஒன்றும் பெரியதல்ல என்பதையும் நினைக்கவும். கிறிஸ்துவுக்குள் வேறுபாடு இல்லை. புற இனத்தான் கொர்னீலியஸ் இராயப்பருக்குச் செய்த உபசரணையையும் ஏற்றார். (அப்.10:23) அந்தியோக்கியா புற இனத்தாருடனும் உண்டார் (கலா.2:12). ஆனால் மற்ற யூதர்கள் சிலர் கிறிஸ்துவர்கள் ஆன பின்னும் இன்னும் அவ்வளவு பக்குவடையாமல் இருப்பது கண்டு அவர்களை பகைத்துக் கொள்ளாமுறையில் புற இனத்தாரோடு உண்பதை (வெளிநடிப்பாக 2.13) நிறுத்திக்கொண்டார், அவ்வளவுதான். இதைப் புற இனத்தார் பெரிய அவமானமாக எடுத்துக்கொண்டதால், தரும சங்கடமான நிலைமை எழும்ப, அதை சின்னப்பர், நான் அடிக்கிறாற்போல் அடித்தால், நீ அழுகிறாற் போல் அழு என்றது போல எல்லோருக்கும் முன்பு துணிச்சலாக (பாவலாவாக நடித்து?)க் கண்டிக்கிறார். இராயப்பர் சூழ்நிலைக்கேற்றவாறு அற்பக் காரியத்தில் நடக்க முயன்றது இன்னும் முழுப்பக்குவம் அடையாதவர்களுக்கு இடறலாகத் தென்பட்டது : அது இராயப்பரும் சின்னப்பரும் உணர்ந்த ஒன்றுதான்.
     இராயப்பர் மட்டுமல்ல, சின்னப்பரும்தான் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் நடந்திருக்கிறார். அதாவது அற்பக் காரியங்களில். அதில் தப்பு ஒன்றும் இருந்ததாக யாரும் நினைத்ததில்லை. விருத்தசேதனம் தேவையில்லை என்பது அ.ப.15ஆம் அதிகாரத்தீர்மானம். இதைச் சின்னப்பரே பெற்றுக்கொண்டு அந்தியோக்கியாபுரி சென்றவர். ஆனால் அ.ப.16-ல் லிஸ்திரா சென்ற சின்னப்பர் யூத இனத்தைச் சார்ந்த தாயின் வற்புறுத்தலுக்கிணங்க, தகப்பன் கிரேக்க இனத்தைச் சார்ந்தவனாக இருந்தபோதும், இவர்கள் மகன் தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் செய்தாரே! அது என்னவாம்?  “அவருடைய தந்தை கிரேக்கன் என அனைவரும் அறிந்திருந்ததால் அவ்விடங்களிலிருந்து யூதர்களின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார்” (அ.ப.16:3)
     அப்போஸ்தலன் என்றால் அனுப்பப்பட்டவன் என்று கிரேக்க மொழியில் பொருள். இச்சொல் பன்னிருவருக்கும் மட்டுமல்ல, மற்றவருக்கும் கூடப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எல்லோருக்கும் அல்ல. மதின்மர், பதினொருவர், பன்னிருவர், அப்போஸ்தலன் எனும் போது கிறிஸ்து தன்னுடன் வைத்திருந்து பழக்கிப் பொறுப்புடன் அனுப்பிய அப்போஸ்தலிக்கப் பதவியைக் குறிக்கிறது. இன்னும் சின்னப்பர் தன்னையும் அப்போஸ்தலன் எனும் போது, தான் கிறிஸ்துவைக் கண்டதாகவும், உயிர்த்த சேசுவுக்கு சாட்சியாயிருப்பதாகவும், இன்னும் புற இனத்தாருக்கென்று அனுப்பப்பட்டவராகவும் விளக்கம் சொல்லித் தன் பட்டத்திற்குக் காரணம் காட்டுகிறார். அதே சமயத்தில் அவருக்கு முன்னால் அப்போஸ்தலராய் இருந்தவர் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் கவனிக்க (கலா1. 17:2-9) தான் காலம் தவறிப்பிறந்தவர், மிகத் தாழ்ந்தவர் என்றும் சொல்வதை மறக்க வேண்டாம். திருச்சபையின் தூண்களானவர்கள் (கலா.2:9) கை கொடுத்ததால் இறைவன் அருள்படி அவர் புற இனத்தார் சபைகளைப் பொறுப்புடன் கவனித்து வந்ததாகக் காண்க. அவர் ஒன்றும் தான் தோன்றியுமல்ல, தனித்தியங்கியுமல்ல! இன்னும் பர்னபா என்பவரும் மற்ற சிலரும் (அந்த்ரோனிக்கஸ், ஜீனியஸ் ரோ.16:7) கூட அப்போஸ்தலர் என்று குறிப்பிடப்படுகின்றனர். (1கொ.4:9-13, 9:5, 15:7, இராயப் 3:2, யூதா 17) ஆவியின் கொடைகளில் ஒன்றாக அப்போஸ்தலத்துவம் கருதப்படுவதையும் (1கொரி 12:28) காண்க. மாறாக, அப்போலோ, தீத்து இன்னும் 72 சீடர் முதலியோருக்கு இப்பட்டம் கொடுக்கப்படாமலிருப்பதையும் கண்டு, பன்னிரு அப்போஸ்தலர் ஒரு தனி, மற்ற யாவரும் தனி எனக் கண்டு கொள்க.
     சின்னப்பருடைய அப்போஸ்தலத்துவமோ துணிச்சலான பேச்சோ, இராயப்பருடையவும் பன்னிருவருடயவும் அதிகாரத்தை ஒரு போதும் எதிர்க்கவில்லை. அவர்கள் கை கொடுத்ததாலேயே, தான் பிற இனத்தவருக்கு அப்போஸ்தலர் ஆனதையும் அவரே சொல்வதைக் காண்க.
குறிப்பு : Peter, John, Paul  என்பவை காரணப்பெயர்களாகும். அவை இடுகுறிப் பெயர்களல்ல. எனவே தமிழாக்கம் செய்கையில் காரணத்தை உணர்த்தி இராயப்பர், அருளப்பர், சின்னப்பர் என்பது பொருத்தமான கத்தோலிக்க மரபாகும். இராயி என்பது அடித்தளப் பாறை. இதன் மேல் கட்டப்படும் கட்டிடம் நிற்கும் காலம் வரை இதுவும் நிலைத்து நிற்பதாகும். அதிலும் இது அசைந்து அழியாத அஸ்திவாரமாகும். இது இராயப்பரும் அவரது பதவியில் வரும் பாப்புமாரும் தவறாவரத்துடன் திருச்சபையை நடத்தி வருகிறார் என்பதை உணர்த்தும். சிலுவையடியில் தேவதாயும், அருளப்பரும் நிற்பதைப்பார்த்து சேசு அவர்களைத் தாயும் மகனுமாக்குகிறார். தாய் என்பது ஸ்திரி. மனுக்குலத்துக்கு ஏவாளைப் போன்ற தாய் அவள் என்பது உணர்த்தப்படும். ஏவாள் பாவத்துக்கும் மரியாள் மீட்புக்கும் தாயாவார். மீட்பு சிலுவையில் நிறைவேறுகிறது. இதனால் கிடைப்பது அருள். இந்த மீட்பும் அருளும் மனுக்குலத்துக்கு அருளப்பர் மூலம் தரப்படுகிறது. அருளப்பர் மனுக்குலத்தின் பெயரால் மாதா மூலம் அருளைப்பெறுகிறார். அவரில் மனித குலமே அருளைப்பெறுகிறது. எனவே அவர் அருளப்பர் எனப்படுவதே சரி. இதனால் மாதா நமக்கு அருள்வழியில் தாய் என்பது உணர்த்தப்படும். சவுல் திருச்சபையை உபாதித்தவர். அகாலமாகப் பிறந்த பிள்ளை போன்றவர். ஆனால் கிறிஸ்துவின் ஒலியால் மனம் திரும்பி, புற இனத்தவரின் அப்போஸ்தலராகி மேல்வான அனுபவங்களையும் பெற்றவர். இந்நிலையில் அவர் தமது மேன்மைகளைப்பறி பெருமை பாராட்டாமல் தமது முன்னைய இழிநிலையை நினைவில் இருத்தி, தமது பலவீனத்தில் இறைமகிமையைப் பறைசாற்றினார். தமது சிலுவையைப் பற்றி வெட்கப்படாமல் அதில் அறையுண்ட கிறிஸ்துவையே போதித்தார். இந்தக் கிறிஸ்தவப் புண்ணியத்தை நமக்கு உணர்த்துவதற்காக அவர் Paulus சின்ன அப்பர் எனப்படுவதே பொருத்தமாகும். இடுகுறிப்பெயராகத் தமிழ் படுத்துபவர் பாப்பானவரது தவறாவரத் தலைமைத்துவம், மாதா பக்தி, சிலுவை வாழ்க்கை ஆகிய அடிப்படைகளை மறைத்துத் தம் சொந்த சுகத்தையும் செல்வாக்கையும், நிலைநாட்டப்பாடுபடுவராயிருப்பதைக் கவனிக்கவும்.