Friday, 14 November 2014

கத்தோலிக்கத்தின் நண்பர்கள் உறுப்பினர்கள் பகைவர்கள் யார்?



கத்தோலிக்கத்தின் நண்பர்கள் உறுப்பினர்கள் பகைவர்கள் யார்?
     பாப்பானவர் – ஆயர் – பங்குச் சாமியார், துறவற சபை, பொதுத்தலைவர், பிராந்தியத் தலைவர் மடங்களின் பொறுப்பாளர்... இவர்களின் ஏவுதல்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு வாழ்கிற அனைவரும் கத்தோலிக்கத்தின் உறுப்பினராவர். இந்த அமைப்புக்கு வெளியில் இருந்து கொண்டே அதை ஆதரிப்பவர்கள் அதன் நண்பர்களாவர். அது எப்படிப் போனால் நமக்கு என்ன, நமது பிழைப்பை மட்டும் பார்த்துக்கொள்வோம் என்பவர் அதன் ஒட்டுண்ணிகளும் பகைவருமாவர், அது அழியாமல் பாதுகாப்பவர் அதன் அன்பர், அபிமானிகளாவர். வெளி விரோதிகள் கத்தோலிக்கத்தைப் பலப்படுத்துவர். உள் விரோதிகள் உடன்பிறந்தே அதைக் கொல்லும் கொடிய நோய்கள் ஆவர்.
     இன்று வழக்கமான பதவிப் பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் யார் அதன் நண்பர்கள், பகைவர்கள், உறுப்பினர்கள் என்பதைத் தெளிவுப்படுத்துவது நல்லது, ஆபத்தும் கூட. நாட்டைக் காப்பவன் உயிரையும் கொடுக்க முற்படுவது சரியா, தப்பா?
1.அன்பு (1கொரி.13) தான் கிறிஸ்துவின் வழி : அதனால் அவர் நம் பாவங்களுக்காகத் தம்மையே சிலுவை மரணத்துக்குக் கையளித்து, இவர்களை மன்னியும் என்று தம் தந்தையிடம் மன்றாடினார். இன்று போராட்டங்கள் மூலம் குரு துறவியர் கிறிஸ்துவரும் போராடி சாதித்துக் கொள்ள முற்படுகிறார்கள். ஆதிக்கிறிஸ்துவர் தமது கிறிஸ்தவ விசுவாசத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி வேதத்துக்காக உயிரைக் கொடுத்து வேத சாட்சிகளானார்கள்.
இன்று தமது கத்தோலிக்கத் தனித்தன்மையை மூடி மறைத்து எல்லோரையும் போல் எல்லாவற்றையும் செய்கிறார்கள். இன்றைய ஆயர் குரு துறவியரது வாழ்க்கை கத்தோலிக்க விசுவாச சன்மார்க்கத்தை மறுதலித்துவிட்டது. எனவே இப்போது கத்தோலிக்கம் அழிந்து விட்டது :  சொத்து சுகங்களையெல்லாம் நாத்திகர் ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறார்கள்.
2. சென்று பொதியுங்கள் என்றார் சேசு. இன்று ஆங்காங்குள்ளவர்கள் கத்தோலிக்க நிறுவனங்களையும் சொத்து சுகங்களையும் சூழ்ச்சியாக ஆக்கிரமித்து சுற்றத்தாருடன் சுகபோகமாக வாழ்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து யாவும் துறந்து விட்டு வந்த போதகர்கள் பசியும், பட்டினியுமாய்க்கிடந்து வேதத்தைப் போதித்து சேர்த்து வைத்த சகலத்தையும் மனம் போல் அனுபவித்து விநியோகம் செய்கிறார்கள் இன்றைய கொள்ளைக்கூட்டத்தார். கத்தோலிக்கத்தின் போதனை சாதனை எதுவும் இன்றில்லை. அது அந்தக்காலம் இது இந்தக்காலம் என்பது அவர்களது நியாயம்.

3.கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். அமைப்பாலும் ஏக்கங்களாலும் ஆண் பெண்ணுக்காகவும், பெண் ஆணுக்காகவும், இருவரும் சேர்ந்து மனித இனத்தைப் பெருக்கவும் தூண்டப்படுகிறார்கள். இதன் மூலம் மனித இனம் பலுக வேண்டுமென்பது நியதி. ஆனால் இன்று ஒரு பிள்ளை, இரு பிள்ளையோடு நிறுத்திக்கொண்டு யாருடனும் பயமில்லாமல் உறவு கொண்டு காலந்தள்ளும் முறையை செயல்படுத்துகிறார்கள். கற்பு, பால்நாட்டம் முதலியன பற்றிய எச்சரிக்கை தேவையில்லை என நினைக்கிறார்கள். இதனால் மேலான தியாகங்களும் சாதனைகளும் அவர்களுக்கு அன்னியமாகி விட்டன. கத்தோலிக்க சன்மார்க்கம் இன்று போதனை சாதனை எதிலுமில்லை : அதாவது இன்று கத்தோலிக்கம் இல்லை.

4. பரம்பரையாக இருந்து வந்த போதகமும் – சாதனைகளும் பகிரங்கமாக் எல்லாமட்டங்களிலும் மறுதலிக்கப்பட்டு, ஆண், பெண் பேதமின்றிக் கலந்து எதையும் செய்து கொள்ளும் ஏற்பாடுகள் கல்வி நிலையங்களிலும் கன்னியர் குரு மடங்களிலும் அமலாக்கப்பட்டு விட்டன. கத்தோலிக்க சன்மார்க்கம் இனியில்லை. பழைய கோயில் சொத்து சுகங்களும் கொள்ளையர் கைப்பொருளாகிவிட்டன. மக்கள் இவர்களுக்கு அடிமைகளாக்கப்பட்டுவிட்டனர். இவர்கள் சொல்வதையெல்லாம் செய்து கேட்டதையெல்லாம் கொடுத்து அடிமைகளாக வாழ்ந்தால் உயிர் வாழ்வதற்கு வேண்டிய பல அத்தியாவசிய சலுகைகள் கிடைக்கும் (உ.ம்) அன்பியம், பங்குப்பேரவை, ஸ்டால் அமைத்து வசூல் பண்ணுதல், திருவருட்சாதனங்கள் வேண்டி பங்குச்சாமியாரை அணுகும் போது குடும்பக்கார்டு போட்டிருக்கிறாயா? மாதா மாதம் பணம் கட்டியுள்ளாயா? என்றெல்லாம் பங்கு மக்களிடம் கேட்டு நச்சரிப்பது போன்றவைகள்) எங்கள் சொற்படி ஆடாதவருக்கு எங்களது ஆதரவு கிடைக்காது:இம்சைகள் பெருகும். இத்தகைய நிலையில் சுதந்திரம் இழந்த அடிமைகளாக ஆடு, மாடுகளைப் போல் பயந்து அடி வாங்கி வாழ்கிறார்கள் கத்தோலிக்கர் : எதிர்ப்பவர் வெளியேற்றப்படுவார்கள் : தண்டிக்கப்படுவார்கள் : பிழைக்க முடியாமல் அடிமைகள் போல் வாழ்கின்றனர் கத்தோலிக்கர். பிறர் பற்றி கோள் குண்டனி பேசி நிர்வாகிகளுக்கு முகஸ்துதி நன்கொடைகள், விருந்துகள் முதலியன கொடுத்துப் பிழைக்கும் கத்தோலிக்கர் பெரும்பாலோர். எந்தச் சிந்தனையுமின்றி நமக்கென்ன என்று வாழ்பவர்கள் பலர். கத்தோலிக்க சுதந்திரம் இன்று இல்லை.
“Libertas Filiorum Dei Est” சுதந்திரம் இறை மக்களின் உரிமைச் சொத்து எனும் அடிப்படை உரிமையை ஆளும் இனம் பரித்து விட்டது.

5. வேறு வழி தோன்றாமல் பலர் பிற மறைகளுக்கும் சபைகளுக்கும் போய்விடுவதால் கத்தோலிக்க சொத்து சுகங்களை இன்றைய நிருவாகிகள் கேள்வி கேட்பாரின்றி அனுபவிக்கின்றனர். பிற மறை – சபைகளில் சேருவது சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுவதன்றோ என்பதை அவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தாலும் சட்டிக்கு அடுப்பு மேல் என்பது அவர்களது தற்காலிக முடிவு.

6.கருத்தடை முறைகளும், ஒன்று அல்லது மிஞ்சினால் இரண்டு பிள்ளைகளே சுக போக வாழ்க்கைக்கும் சமுதாயத்திற்கும் பொருத்தம் என்ற உணர்வு தாறுமாறான ஆண்-பெண் உறவுக்கு வாய்ப்பளிப்பதால் கத்தோலிக்கத்தில் கற்பையடுத்த போதகத்தை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை எனும் பின்னணியில் கத்தோலிக்கம் சன்மார்க்க முழு சட்டமும் அழிந்து விட்டது. அதோடு கத்தோலிக்கமும் அழிந்து விட்டது.

7. இன்று எதுவுமே நல்லது இல்லையா? சாக்கடையிலும் H2o என்ற தண்ணீர் இருக்கிறது. ஆனால் அதை யார் வடிகட்டிக் குடிக்கமுடியும்.? அதிகாரம் என்பது ஆணவத்தையும் சுகபோக வாழ்க்கையையும் தனக்கென வகுத்து வளர்க்கும் சாக்கடையாகும்.

8. வரதட்சணை, மாமியார் கொடுமை (மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே என்பதை உணராமல்) ஆடம்பரக் கல்யாணச் செலவுகள் போன்ற அவலங்கள் நம் சமுதாயத்தை இன்னும் ஆட்டிப்படைக்கின்றன. கோயில் குளங்களும், திரியாத்திரைகளும் நிறைய இருந்தாலும் ஆழ்ந்த இறையுணர்வுகளும் தன்னலமற்ற சேவைகளும் இலை மறை காய்களாக மாறிவிட்டன. மினுக்கும் மிடுக்கும் மலிந்தாலும் உயர்ந்த நோக்கங்களும் வெளியே தெரிய வருவதில்லை. இதனால் எடுத்துக்காட்டுகள் அருகி மறைகின்றன.

9. வேலையிழந்த பெண்மையின் வெளியுலக சேவைகளுக்காக விலைப்பேசப்படுகிறது. சுகபோகத்தை ருசி பார்த்தவர் இனியும் முன்னைய இல்வாழ்க்கை முறைக்கு வருவாரா? வந்தால் சமுதாயத்துக்கு நஷ்டமில்லையா? ஆண்களின் உல்லாசமான வாழ்க்கைக்கு இன்றைய பெண் கலாச்சாரம் உதவியாயிருப்பதால் ஆண்கள் எதையும் தடுக்கமாட்டார்கள். கழுதைகள் ஆண்கள் சுமக்கட்டும் : நாம் துள்ளித் திரிவோம் என்ற பொருப்பற்ற மனநிலை தலைதூக்கி விட்டால் நாமும் வீடும் முன்னேறுமா?





திருத்தங்களைத் தாண்டி வந்துள்ள
இன்றைய கத்தோலிக்கம்.
கடந்த 2000 ஆண்டுகளாக எத்தனையோ தியாகங்களை மேற்கொண்ட கத்தோலிக்கத்தை உடைப்பதே நவீனரது நோக்கமாகையால் அது சரியல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். இப்போது வந்துள்ள மாற்றம் எதுவும் சங்கத்தால் தீர்மாணிக்கப்பட்டதல்ல, சங்கத்துக்குப்பின் செயல்பட்ட நவீனர்களால் இந்த மாற்றங்கள் படிப்படியாக தந்திரமாகப் புகுத்தப்பட்டவையாகும். பீடத்தை அழித்து வழிபாட்டை ஊர்க்கூட்டமாக்கி, வசூல்களைப் பெருக்குவது சங்கத்தின் தீர்மானமேயல்ல. திருட்டுப் புத்தியுடன் செயல்பட்ட நவீனர்களை மக்கள் அடையாளம் கண்டுகொண்டாலும், மக்களை மயக்கி நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் நிறுவனங்களில் உங்களுக்கு ஒரு உதவியும் கிடையாது எனும் போது மக்கள் சிலர் அவர்களது வலையில் சிக்கியும், மற்றவர்கள் வெளியேறி, போலித்தலைவர்கள் கையில் அகப்பட்டும் அழிகிறார்கள். படிப்படியாக செமினரிகளிலும் துறவற மடங்களிலும் நவீனங்கள் நுழைக்கப்பட்டு தாங்கள் படித்ததுதான் சரி எனும் இன்றைய குரு துறவியர் குருட்டு வழிகாட்டிகளாகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வெளியேரும் குரு துறவியர் மேலும் ஒருபடி அகன்று சென்று மக்களை நரக வழிநடத்துகிறார்கள். மக்கள் அவர்கள் வலையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். அன்பை இழந்து உரிமைப் போராட்டங்களில் மடிகிறார்கள். அவர்கள் வலையில் மாட்டிக்கொண்ட மீன்களானார்கள் என்பதை இனியாவது உணரமாட்டார்களா?

எல்லோரும் தலைவரா?
ஆண்மையும் பெண்மையும் ஒவ்வொரு மனிதரிலும் ஏதோ ஒரு விகிதாச்சாரப்படி அமைந்துள்ளது. எந்த இரு நபரும் எல்லாவித்திலும் சமமாயிருக்க முடியாது. ஏதோ ஒரு காரியத்தில் மற்றவர்களைப் பின்பற்றவும், அல்லது வழிநடத்தவும் வேண்டிய தகுதியும் ஏற்படும். அவரவரது திறமை எது எனக்கண்டுப்பிடித்து அந்த வழியில் செயல்படுவதே பொருத்தமாகும். இதற்கு பொது ஒழுக்கு இல்லை. ஆனால் பாலுணர்ச்சியும் கவர்ச்சியும் எல்லோரிடமும் எப்போதும் ஏதோ ஒரு அளவுக்கு இருக்கும் என்பதால் எப்போதும் விழிப்பாயிருந்து கற்பைக் காப்பது ஒவ்வொருவருடையவும் கடமையாகும். தேவையற்ற நெருக்கமும் ஈடுபாடும் ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் தவறான நினைவு சொல் செயலில் ஈடுபடச் சொல்லுமாகையால், புனித ஞானப்பிரகாசியார் போன்றவர் அயராது கண் அடக்கம் கொண்டவராய் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய எந்தச்சூழ்நிலையிலும் தம்மையே கட்டிக்காத்துக் கொள்வர் (அந்தக் காலச்சாமியார்கள் அறையில் சவுக்கை ஒன்று தொங்கிக்கிடக்கும் இதன் நோக்கம் பாலியல் உணர்வு வரும் நேரம் தங்களைத் தாங்கள் அடித்துக் கொள்வதின் மூலம் அவ்வுணர்ச்சிகளிலிருந்து விடுபடுவார்கள்) தலைவர் என்பது வீட்டை அல்லது நாட்டை ஆள்வது என்பதில் அல்ல, தன்னையே கட்டுப்பட்டுக்குள் வைத்து வாழ்வதில் அடங்கும். இந்தக் கண்ணோட்டத்தின் படி எல்லோரும் தலைவரே. அப்பதவியை அவர் வசிக்கும் அளவுக்கு சனமான தண்டனைகளுக்கு உள்ளாவர்.

No comments:

Post a Comment