ஆவியின் வரங்கள்
அப்போஸ்தலர் எப்போதும் ஆவியால்
இயக்கப்பட்டுத்தான் ஆண்டவர் பின் சென்றனர். ஆனால் ஆவியானவரது செயல்பாட்டை சேசு
பரலோகம் சென்ற பத்தாம் நாள் அனுபவப்பூர்வமாக ஆவியின் இயக்கத்தால் உணர்ந்தனர்.
அதுவும் நிரந்தரமான முறையில் அல்ல. அவர்களது விசுவாசத்திற்கு ஒரு தூண்டுதலாகத்
தரப்பட்டது தான். உண்மையில் உண்டாலும் குடித்தாலும் கர்த்தராகிய சேசுவுக்காக,
மோட்சத்துக்காக எதைச் செய்தாலும் அதன் தூண்டுதலால், செயல்பாடு இறைவனுடன் உள்ளூர
ஒன்றி நிற்பதும், வாழ்வதும் யாவும் பரிசுத்த ஆவியால் தான் நடை பெறுகிறது. அவர்
நமது உடலுக்கும் உயிருக்கும் செயல்களுக்கும் உள் உயிராய் அமைந்து நம்மை மோட்ச பாக்கியத்தை
அனுபவிக்க வல்லவராக்குகின்றார். ஆவியானாவர் உலகை முழுவதையும் நிரப்பி அனைவரையும் நற்செய்தி
வாழ்க்கைக்குத் தூண்டி எழுப்பி வழி நடத்துகிறார்.
சிலர் பன்மொழி பேசுதல், புதுமை செய்தல்,
தீர்க்கதரிசனம் சொல்லுதல் முதலியவற்றை பெரிதாக நினைக்கிறார்கள். இவையெல்லாம்
சபையின் தேவைக்காக சிலருக்கு சிலகாலம் தரப்படலாம். ஆனால் இவை நிரந்தரமானதல்ல, இவை
இல்லாவிட்டாலும் ஒரு குறையுமில்லை. அன்பே பிரதானம். அன்பில்லா விட்டால்
மோட்சத்தையடுத்த எதுவும் நம்மில் இல்லை. அன்பு என்பது இறைவன்... அவரில் நாம்
ஊறிப்போய் அனைத்துலகையும் அரவணைத்துப் பேணி, பகைவரையும் கெட்டவர் மீதும் மழை
பொழியும் பரமபிதா போல் நேசித்து வாழ்வதே ஆவியானவரால் இயங்குவதற்கு அடையாளம்.
பகிர்ந்துண்பது எப்போதும் சாத்தியமாகாது, ஆனல் யாவருக்காகவும் செபித்து
மோட்சத்தைக் கொடுப்பது தான் உண்மையான அன்பு. ஆவியின் உறுதியான வரம் இதுதான்.
வேதத்தைச் சொல்லாலும் முன் மாதிரிகையாலும் வேத சாட்சி மரணத்தாலும் கூடப் போதித்து
உலகை முழுவதும் மனம் திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதுதான் ஆவியில் வாழும்
வாழ்க்கை. இதையே அப்போஸ்தலர் பரிசுத்த ஆவியைப் பெற்றபின் கடைசிவரை செய்தனர்.
அப்போஸ்தலர் பணி 13-14-15 அதிகாரங்கள் அசாதாரணமான வரங்கள் வேண்டுமென
வலியுறுத்துபவையல்ல. அவை சிலருக்கு சில காலம் தரப்படும். அதற்காக அவர்கள் அந்த
வரம் இல்லாதவரை இழிவாக நினைப்பது தவறு என்பதை வலியுறுத்தவே சின்னப்பரால்
எழுதப்படவை என்பதை உணர்க.. (1கொரி 12:21) யாவற்றிற்கும் மேலான வரமாகிய அன்பைத்
தேடுங்கள் என்கிறார் சின்னப்பர்.
”இரட்சிக்கப்பட்டுவிட்டேன்..” என்கிறார்களே..!
கிறிஸ்துவை ஏற்று சபையில்
சேர்க்கப்பட்டவர்கள் இரட்சிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர். அந்த இனத்தைச் சேர்ந்தவர்
என்பதே (அப்போஸ்தலர் பணி 2-47) பொருள், மற்றவர்களுக்குப் போதித்த பின் தானே
அழிந்து போகாதபடி தன்னையே ஒறுத்துக் கொள்வதாக சின்னப்பர் சொல்கிறாரே! நிற்பவன்
விழுந்து போகாதபடி எச்சரிக்கையாய் இருக்கக்கடவான் என்று ஆகமம் சொல்கிறதே :
இரட்சிக்கப்பட்டு விட்டதும், படாததும் கடைசித் தீர்ப்பு நாளில் தானே எல்லோருக்கு
முன் அறிவிக்கப்படும். பின் இந்த பெந்தகோஸ்துகள் மட்டும் இரட்சிக்கப்பட்டு
விட்டதாக உரிமை பாராடுவதில் ஏதாவது பொருள்
இருக்க முடியுமா?! இவர்களிடத்தில் எத்தனை பாவங்களும் அறியாமையும் இருக்கும்
என்பதை யாவரும் அறிவர். விசுவசித்து ஞானஸ்நானம் பெற்று திருச்சபையின் சொற்படி
கடைசி வரை நிலைத்திருப்பவர் மட்டும் தான் இரட்சண்யம் அடைவர் : அவரை
இரட்சிக்கப்பட்டவர் என்று நாம் சொல்லுவதற்கில்லை.
பைபிளை மனம் போல் படித்து
விளக்கி தம்மை இரட்சிக்கப்பட்டவராக நினைத்துக் கொள்பவர் தம்மையே ஏமாற்றிக்
கொள்கின்றனர். ஊழையிடும் கூட்டத்தில் கலந்து உணர்ச்சிகளைத் தூண்டி எழுப்பி,
பன்மொழி பேசுவதாக நினைப்பவர் தம்மையே இரட்சிக்கப்பட்டவராக கருதுகின்றனர்.
ஆதியிலிருந்து அப்போஸ்தலர் விசுவாசப்பிரமாணம் சபையில் இருந்து வந்துள்ளது. அதன்
விளக்கமான விசுவாச பிரமாணங்கள் அந்தந்தக் காலத்திற்கேற்ப அறுதியிட்டுக்
கூறப்பட்டுள்ளன. இவற்றின் படி பிதா சுதன் பரிசுத்த ஆவி, புனிதர், உத்தரிபிடத்தோர்,
அருட்சாதங்கள் இவை யாவற்றையும் தத்தம் நிலைக்கேறப் கற்று ஆண்டு தோறும் தேவ ஆராதனை
முறையில் ஈடுபட்டு ஞான வாழ்க்கையை ஆழப்படுத்தி மாறி மாறி தவறும் போதெல்லாம்
மீண்டும் மன்னிப்பினையும் அருட் சாதனங்களையும் தேடுபவர் இரட்சிக்கப்பட்டு
கொண்டிருக்கிறார்கள். இரட்சிக்கப் பட்டுவிட்டவர் யாரும் இந்த உலகத்தில் இல்லை.
ஆகமப் புரட்டர்களுடைய வலையில் விழுந்து இரட்சிக்கப்பட்டு விட்டதாக நினைக்கும் யாரும்
பரிதாபமான முறையில் தம்மையே ஏமாற்றிக்கொள்கிறார்.“Dominus augebat Qui salvi fierent” (Acts
2-47)
இரட்சிக்கபடுபவரது – படக்கூடியவரது கூட்டத்தை ஆண்டவர் பெருக்குகிறார்.
இரட்சிக்கப்பட்டவரையல்ல. பெந்தகோஸ்து வலையில் எக்காரணத்தை முன்னிட்டும் விழும்
கத்தோலிக்கர் தம் விசுவாசத்தை இழந்து அழிகிறார்கள் என்பதை உணர்வது அவர்களுக்கு
நல்லது.
No comments:
Post a Comment