நெரிந்த நாணலையும்
1சாமுவேல் 24:4 சவுல் தாவூதின் மீது பொறாமை கொண்டார். தாவீதைக்
கொல்வதற்கு எத்தனையோ சூழ்ச்சிகளைச் செய்ய முற்பட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் சவுல் ஒரு
குகையிலும் தாவீது அதன் வெளியிலும் தங்கி
இருக்கிறார்கள். சவுல் தூங்கும் நேரத்தில் அவரைக் கொல்ல தாவீதுக்கு நல்ல அவகாசம்
கிடைத்தது. அவரோடு கூடி இருந்தவர்களூம்
இதுதான் சமயம் என்று தாவீதை ஏவி விட்டனர். ஆனால் தாவீது சவுலை கொல்ல முற்படவில்லை.
சவுலுடைய ஆடையின் விளிம்பை மட்டும் வெட்டி எடுத்துக்கொண்டு சென்றார் (24:12) பிறகு
சவுலைச் சந்தித்த போது அந்த ஆடையின் விளிம்பை தம் கையில் இருப்பதைக் காட்டி,
உம்மைக் கொல்வதற்கு எனக்கு நல்ல அவகாசம் கிடைத்தாலும் நான் அப்படிச் செய்ய வில்லை.
என்னை ஏன் நீர் கொல்ல நினைக்கவேண்டும்(11) என்னிடம் உமக்கு விரோதமான எந்த நினைவும்
இல்லையே என்றார்(17) இதைக் கேட்டு சவுல் மனம் மாறி அழுதார்.
ஆண்டவர் நெரிந்த
நாணலையும் முறிக்காதவர். அவரைப் பின்பற்றும் குரு-துறவியர்-விசுவாசிகள்
பழிவாங்கலாமா? ஒருவர் ஒருவர் பலவீனத்தைப் பயன்படுத்தித் தம் திட்டங்களை
நிறைவேற்றிக் கொள்ளலமா? யாரையும் தண்டிக்காத ஆண்டவரது சீடர்கள், இவர்கள் அறியாமல்
செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்றவரது வாரிசுகள், வேண்டுமானால் (மத்.26:53)
என் தந்தை நான் கேட்டால் (என்னை பாதுகாப்பதற்கு) பன்னிரண்டு தூதர் படைகளை
தரமாட்டாரா என்றவரைப் பின் பற்றிப்போதிக்கும் பதவியாளர்கள், தங்களது சதியாளர்கள என
நினைப்பவர்களை அழிக்க, பழிவாங்க நினைக்கலாமா? அல்லது எதிரியின் பலவீனத்தைப் பயன்
படுத்தி தம் காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாமா?
இங்கு நாம் சிந்திக்க
வேண்டியது என்ன? குரு-துறவியர் பதவியில் உள்ளவர்களது பிடியில் மற்றவர்கள்
இருக்கிறார்கள். பதவியாளர் நினைத்தால் தம் கீழ் உள்ளவரை எப்படி வேண்டுமானாலும் நசுக்கலாம்,
நசுக்கவும் செய்கிறார்கள். இதற்கு பயந்த விசுவாசிகள் அவர்களுக்கு ஏற்றாற்போல் பேசி
நடித்துத் தம் காரியங்களை சாதித்துக் கொள்ளும் போது முகஸ்துதிமுன் மடங்குகின்ற
பொறுப்பாளரை வென்று விடுகிறார்கள். ஆக இருசாரரும் ஒருவர் ஒருவரது பலவீனத்தைப்
பயன்படுத்திப் பிழைக்கிறார்கள். வேதம் ஓதும் கிறிஸ்துவ சபையின் இலட்சணம் இதுதானா?
ஞானஸ்நானம், கலியாணம்,
கல்லறை இந்த மூன்றிற்கும் சாமியார் தயவு வேண்டியிருக்கிறது. வேலை நியமனங்களுக்கும்
கையெழுத்துகளுக்கும் குரு-துறவி பதவியாளர் அல்லது முக்கியஸ்தரது பரிந்துரையும்
நற்சாட்சி பத்திரமும் இன்றியமையாதவை. இதனால் மக்களது பிடி முழுவதும் திருச்சபையின்
நிருவாகத்தின் கையில் இருக்கிறது. இதனால் மக்கள் இந்த நிருவாகம் எப்படி நடந்து
கொண்டாலும் கண்டு கொள்வதில்லை. அதைக் கடவுள் கேட்டுக்கொள்ளட்டும் என்கிறார்கள்.
அவர்களால் சபை அழிகின்றது.
மக்களது கையில் பணமும்
கோள் குண்டனிகளும் இருக்கின்றன. இவை இருக்கும் இடத்தைப் பொறுப்பாளர்கள் நன்றாகப் பயன்படுத்துகின்றனர்.
கோள் மூட்டுவோரையும் பணம் தருவோரையும் மதித்து அவர்களுக்கு எந்த உதவியும் செய்து
அவர்களைக் கருவிகளாக வைத்து, எளிய மனத்தவரையும் இவர்கள் நினைத்ததையெல்லாம்
பாராட்டி சாதித்துக் கொடுக்க இயலாத அல்லது முன்வராதவரையும் நேரம் பார்த்து
பழிவாங்குகிறார்கள். இதனால் பொறுப்பாளரும் சபையாரும் தவறான நோக்குடனும்,
முறையிலும் செயல்பட்டுத் தங்கள் சதிகார, கபடமுள்ள மனங்களை மேலும் மேலும்
மாசுபடுத்திக் கொள்கிறார்கள்.
கீழோராயினும் தாழ உரை.
உன் பேச்சு ஆம், ஆம், இல்லை, இல்லை என்று மட்டும் இருக்கட்டும். அதற்கு
மிஞ்சியதெல்லாம் (மத்.5:37) தீயவனிடமிருந்து வருவதாகும். கிறிஸ்துவைப் பின்பற்றும்
யாராயிருந்தாலும் மத்தேயு 5, 6, 7 அதிகாரங்களை தியானித்து உங்கள் மனச்சான்றை
அமைத்துக் கொள்ளுங்கள். இந்த மலைப்பிரசங்கம் உங்கள் வாழ்க்கையில் பிரதிபலிக்காவிட்டால்
நீங்கள் கத்தோலிக்கத்துக்குள் இருக்கவோ பதவி வகிக்கவோ தகுதி உள்ளவரல்ல.
அடுத்த யாருடைய
பிடியையும் உன் கையில் வைத்துக் கொண்டு அவரை ஆட்டிப்படைக்காதே. சுயேட்சையாக
தாராளமனதுடன் பிறரை மதித்து ஊழியம் செய்வதே பெருந்தன்மையான சேவையாகும்.
No comments:
Post a Comment