நிருவாகம் என்பது என்ன?
ADMINISTRATION என்பதைத் தமிழில் நிருவாகம் என்கிறோம்.
ஆனால் MINISTRATION என்பதன் பொருளில் அதன் தமிழாக்கத்தில் துலங்கவில்லை என வேண்டும்.
நிருவாகத்தில் உள்ளவர்களை Public
Servants எனும் போது, அந்த
ஊழியம் என்பது உணர்த்தப்படும். என்றாலும் யாரும் அதை உணர்வதாகத் தோன்றவில்லை.
பாப்பானவர் கத்தோலிக்கம் முழுவதற்கும் தலைமையில் இருப்பவர். கையொப்பம் இடும்போது SERVUS SEVORUM DEI அதாவது இறைவனது ஊழியக்காரர்களது ஊழியன் எனச் சுட்டுகிறார். அவரது
காலில் விழுந்து மக்களே கும்பிடும்போதும் அவரது அரியணையில் அவரை அமர்த்தி சுமந்து
செல்லும் போதும், மேற்படி ஊழியன் என்பது துலங்குமா? சிரிப்புத்தான். இதே போலத்தான்
அரசாங்கத்தின் பொறுப்பாளர்களை அரசு-ஊழியர் என்று சொல்லிக்கொண்டு தமக்கு வேண்டிய
சலுகைகளுக்காகவோ, சேவைகளுக்காகவோ அவர்கள் காலில் விழுந்து கும்பிடுவதும்
சிரிப்புக்குரியது தானே? பதவி கிடைத்ததும் தலைகால் தெரியாமல் ஆடும் தலைவர்களை
ஊழியர்கள் யாவரும் அறிவாரானாலும் இதையெல்லாம் சொன்னால் வம்புதானே! வேண்டாம்.
நமது திருச்சபை நிருவாகிகள்
பெரும்பாலும் கோள்மூட்டிகளுடைய கைப்பொம்மை என்றால் மிகையாகுமா? ஆலோசகர்கள் எனும்
பதவியில் உள்ளவர் ஒன்று தலையாட்டிப் பொம்மைகள் அல்லது கோள்மூட்டிகள் ஆவர் என்பதில்
கொஞ்சமேனும் உண்மையில்லையா? இதனால் நிருவாகம் சீரழிவதால் மக்களுடைய
அதிருப்திக்கும் சாபத்துக்கும் உள்ளாகின்றனர். நிருவாகிகள் கீழ்ப்படிதல் என்ற
பெயரை வைத்துக்கொண்டு பிறப்பிக்கும் அதிகாரிகளுக்குமேலே கடவுளுடைய கைத்தடி
இயங்குவதை நான் காண்கிறேன். அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று (நிதானமாக
மட்டுமல்ல, எழுந்து நின்று கொண்டு) கொல்லும்.
சமீப காலத்தில் பல நவீனங்கள்
படிப்படியாக் குரு மடங்களிலும், பங்கு கன்னியர் மடங்கள் முதலிய நிறுவனங்களிலும்
புகுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக வத்திக்கான் (II)
சங்கத்தைச் சொல்கின்றனர். ஆனால் வத்திக்கான் ஏடுகளில் இந்த நவீனங்கள் ஏதும் இல்லை.
வத்திக்கானை அமல்படுத்துகிறோம் என்ற போர்வையில் பாப்பானவரையும் பெரும்பாலான ஆயர்களையும்
மடக்கிவிட்டு இந்த நவீனங்கள் தலை தூக்கி விட்டன. “பழமைவாதிகள்” (சத்தியவாதிகள்)
மறைந்து விட்டபின், நவீனர்கள் ஆட்டம் போடுகிறார்கள். இன்று கத்தோலிக்கத் திருப்பலி
இல்லை. ஆலயம் செல்வது சாலவும் கேடாகிறது. எதிர்ப்புத் தெரிவித்தால்
கோயிலுக்குள்ளேயே அடிதடி என்ற பல கட்டங்களை தாண்டி இன்று பதித நாத்திக வழிபாடும்,
போதகமும் மட்டுமே ஏற்புடையதாகி விட்டது.
தலைவரின் தகுதி எதில் அடங்கும்?
தம் பொறுப்புக்கு அடியில் உள்ள ஒவ்வொரு
உறுப்பினரையும் தனது கழுத்து, நெஞ்சு, வயிறு, கைகால்கள் என உணர்ந்து, இவருக்கு
என்ன நன்மை தின்மை ஏற்பட்டாலும் அவற்றைத் தம்முடையதென உணர்ந்து வேண்டியதைத்தானே
முன்னின்று செய்து வைப்பதில் தான் அடங்கும். மாறாக உளவு பார்த்து கோள்
சொல்பவர்களைத் தமது சலுகைகளுக்குரிய கையாட்களாக வைத்துக் கொண்டு மற்றவர்களை
அடிமைகளாக்கும் கொடுமைப் படுத்தி நடத்துகிறவர்களை உடனே பதவியை விட்டு
அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
நல்ல ஆயன் தன் ஆடுகளை அறிவான்.
கொள்ளையடிப்பவன் அவற்றை அருத்து ருசியாகச் சமைத்துச் சாப்பிடுவதிலேயே
குறியாயிருப்பான். விலை பேசி பணம் சேகரிப்பதிலேயே குறியாக இருப்பான்.
முற்கால மன்னர்கள் மக்களின்
மனநிலைகளுக்கேற்ப தங்கள் வழிகளை மாற்றிக் கொண்டு செயல்பட்டார்கள். கன்றுக்குட்டி
அரசகுமாரனது தேர்க்காலில் அடிபட்டு இறந்தபோது, தாய்ப்பசு அரசனது மணியை அடித்து
நியாயம் கேட்டுப்பெற்றுக்கொண்டது. தன் மகன் என்று பார்க்காமல் தேர்க்காலில் அவனை
அடித்துக் கொன்று நியாயம் வழங்கினான்.
மன்னன்
இளம் வயதினன் அல்லவா? நாம் வயோதிகர் அல்லவா!, நமக்கு இவன் என்ன பொருத்தமான நியாயம்
சொல்ல முடியும் என்று இரு முதியோர் பேசிக்கொண்டு அரண்மனைக்கு வந்ததை பின் கட்டு
சன்னல் வழியாய் கேட்டு சுருக்கென யோசித்தான் மன்னன். உடனே அந்த முதியோர் தனது
வாசலுக்குள் நுழைவதற்குள் நரை முடியை அணிந்து முதியவர் கோலத்தில் அமர்ந்து
அவர்களது மனதிற்கு உகந்த தீர்ப்பை அளித்து அனுப்பினான்.
மந்திரிகளும், உளவர்களும் கொடுக்கும் தகவல்களை
முழுவதும் நம்பாமல் அரசனே இரவில் உளவு பார்த்து தேவைகளுக்கு உதவியதை “நாராய் நாராய்..” என்று தொடங்கும் பாடல்
உணர்த்துகிறது. வெளியூர் புலவன் இரவில் குளிர் தாங்கமுடியாமல் மதுரையில்(தெருவில்)
நடுங்கிக் கொண்டு கிடப்பதை நாரையின் மூலம் தம் மனவிக்குச் செய்தி சொல்லி
அனுப்புகிறான். அந்நேரம் உளவு பார்க்க உலாவி வந்த மன்னன் தனது மேலாடையை அவனுக்கு
எறிந்து விட்டு, பிறகு மறுநாள் காலையில் எனது போர்வையைக் கவர்ந்த திருடனைக் கொண்டு
வாருங்கள் என்று ஏவி விட்டான். சேவகர்கள் புலவனைக் கொண்டு வந்து நிறுத்தினர்.
மன்னன் அவனது தரித்திரம் நீங்கும் அளவுக்கு கொடையளித்து அனுப்பிவைத்ததை “நாராய்
நாராய் செங்கால் நாராய்... பனங்கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
“ எனும் சங்க இலக்கியப் பாடல் உணர்த்துகிறது. சுகபோகமாக வாழ நினைக்கும் தலைவர்கள்
தமது முன்னோர்களின் மாதிரிகைகளைக் கண்டு வெட்கி பணி செய்து கிடப்பதே என் கடன்
என்பதைத் தம் குறிக்கோளாக்க வேண்டும். வெட்கம் இல்லாதவர்கள் தலைமைப் பீடங்களுக்கு
உரியவர் அல்ல. மக்களை விசாரிக்க செல்லும் ஆயர், குரு, துறவியர் விலை உயர்ந்த நவீன
வாகனங்களில் பயணம் செய்வதும், தமது விசாரணைக்கு காணிக்கையாக பலநூறு ஆயிர கணக்கில் கூலி வாங்குவதும், கத்தோலிக்கத்துக்கே
வெட்கமல்லவா? இயேசு இப்படிச் செய்தவரல்ல. ஆகவே கத்தோலிக்கர்களே விழிப்பாயிருங்கள்!
மனுமகன் எப்போது வருவார் என்பது நமக்குத் தெரியாது. ஆகவே பத்துக்கன்னியர்களில் விவேகமாக
செய்ல்பட்ட ஐந்து கன்னியர்கள் போல் விழிப்பாயிருங்கள்.
No comments:
Post a Comment